எம்.ஜி.ஆர்.திட்டு சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படுமா?

இயற்கை எழில் கொஞ்சும் எம்.ஜி.ஆர்.திட்டு சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.;

Update: 2023-01-30 19:14 GMT

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இந்த சுற்றுலா மையத்தில் மாங்குரோவ் காடுகள் என்னும் சுரபுன்னை காடுகள் அதிக அளவில் உள்ளன. இங்கு சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாய்க்கால்கள் உள்ளது. இங்கு பல்வேறு விதமான தாவரங்கள், மூலிகைகள் வளர்ந்து வருகிறது. இது தவிர பறவை இனங்களும் உள்ளன. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

மாங்குரோவ் காடுகளை படகு வழியாக சென்று ரசிப்பது சுற்றுலா பயணிகளுக்கு ஆனந்தத்தை தரும். இதனால் இங்கு வெளிநாடு, வெளி மாநிலம் என பல்வேறு இடங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

எம்.ஜி.ஆர். திட்டு

இந்நிலையில் இந்த சுற்றுலா மையத்திற்கு மிக அருகில் கடற்கரையோரம் எம்.ஜி.ஆர்.திட்டு கிராமம் இருந்தது. நீண்ட மணல் பரப்பை கொண்ட இந்த பகுதி தனித்தீவாக காட்சி அளித்தது. ஆனால் கடந்த 2004-ம் ஏற்பட்ட சுனாமி என்னும் பேரலை தாக்கி இந்த கிராமமே சிதறி போனது. அதாவது ராட்சத அலையில் சிக்கி, அங்கு வசித்து வந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 160 பேர் தங்கள் இன்னுயிரை இழந்தனர்.

சுனாமியில் இருந்து தப்பிய மக்கள், தற்போது முழுக்குத்துறை சுனாமி நகரில் அந்த சுவடுகளை மறக்க முடியாமல் வாழ்ந்து வருகின்றனர். தற்போது எம்.ஜி.ஆர். திட்டு பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக ஒரு சில வீடுகள் மட்டும் இடிந்து தரைமட்டமாகி கிடக்கிறது.

விடியல் விழா

இருப்பினும் எம்.ஜி.ஆர்.திட்டு பகுதியை சுற்றுலா தலமாக மாற்றினால் சிறப்பாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறையும் இணைந்து முயற்சி எடுத்தது. அதன்விளைவாக கடந்த 2005-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.திட்டு என்னும் தீவை வெளி உலகுக்கு தெரியப்படுத்தும் வகையில் அப்போதைய சிதம்பரம் உதவி கலெக்டராகவும், அதன்பிறகு கடலூர் மாவட்ட கலெக்டராக இருந்த ராஜேந்திரரத்னூ சூரிய உதயத்தை காணும் வகையில் விடியல் விழாவை நடத்தினார்.

அதன்பிறகு எம்.ஜி.ஆர்.திட்டை சுற்றுலா தலமாக்கும் முயற்சிகள் எதுவும் எடுக்கப்பட வில்லை. அதன்பிறகு மீண்டும் 2012-ம் ஆண்டு கலெக்டராக இருந்த ராஜேந்திரரத்னூ விடியல் விழாவை நடத்தினார். இதில் வெளி நாடுகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு தங்கி, சூரிய உதயத்தை கண்டு களித்ததுடன், அங்கு நடத்தப்பட்ட தமிழக கலாசார நடனம், நாட்டியம், கலைநிகழ்ச்சிகள், யோகா போன்ற நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர்.

அலை சறுக்கு

அதோடு விட்டு, விடாமல் மீண்டும் எம்.ஜி.ஆர்.திட்டில் அலை சறுக்கு விளையாட்டையும் அவர் தொடங்கி வைத்தார். அதன்பிறகு அதுவும் கைவிடப்பட்டது. இந்த எம்.ஜி.ஆர். திட்டு பகுதிக்கு படகு மூலமாக தான் செல்ல முடியும். இதற்காக முழுக்கத்துறையில் இருந்து படகு மூலம் செல்ல வேண்டும். இந்த பகுதியில் இருந்து அதிகாலையில் சூரிய உதயம், படகில் சென்று சுரபுன்னை காடுகளை ரசித்தல், காடுகளில் உள்ள பறவைகளை ரசித்தல் போன்றவை அற்புதமாக இருக்கும். கடற்கரையோரம் நிற்கும் தென்னை மரங்களும் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் இருக்கிறது.

பிச்சாவரம் சுற்றுலா தலத்திற்கு வரும், சுற்றுலா பயணிகளிடம் எம்.ஜி.ஆர்.திட்டு பற்றி எடுத்துக்கூறி அவர்களை அங்கு அழைத்து செல்ல சுற்றுலா துறை நடவடிக்கை எடுத்தால், எம்.ஜி.ஆர். திட்டு மேம்படுத்தப்படும். ஆனால் அங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் குடிநீர், கழிவறை, கடைகள், தங்கும்விடுதிகள் கட்டி விட்டால் அரசுக்கு வருவாய் கிடைப்பதோடு, சுற்றுலா தலமாக சிறப்பாக செயல்படும். இதற்கு அரசும், சுற்றுலா துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர். ஆனால் தற்போது அனுமதியின்றி சிலர் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதாக புகார் எழுகிறது. ஆகவே இதை சுற்றுலா தலமாக்கினால் அரசுக்கு வருமானம் கிடைக்கும்.

சுற்றுலா தலமாக்க வேண்டும்

இது பற்றி எம்.ஜி.ஆர். திட்டு அறிவழகன் கூறுகையில், எம்.ஜி.ஆர். திட்டு பகுதியில் முன்பு விடியல் விழா நடத்தினார்கள். அதன்பிறகு அங்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை. இயற்கை எழில் பகுதியாக எம்.ஜி.ஆர். திட்டு இருந்தது. தற்போது அங்கு கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்து உள்ளது. இதை அகற்றி சீரமைக்க வேண்டும். கிள்ளை முதல் முழுக்குத்துறை வரையுள்ள சாலைகள் குறுகியதாக உள்ளது. இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும். முழுக்குத்துறை பகுதியில் படகுகள் நிறுத்த ஜெட்டி அமைத்தால், சுற்றுலா பயணிகள் படகில் ஏறி, இறங்க வசதியாக இருக்கும். இது போன்ற நடவடிக்கைகளை எடுத்தால் எம்.ஜி.ஆர். திட்டும் சுற்றுலா தலமாக மாறும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

இது பற்றி எம்.ஜி.ஆர். திட்டு கணேசன் கூறுகையில், எம்.ஜி.ஆர். திட்டு பகுதி நீண்ட கடற்கரையை கொண்டது. இதை சுற்றுலா தலமாக மாற்றினால், சுற்றுலா துறைக்கு வருமானம் அதிகரிக்கும். அதற்கேற்ப ஆற்றின் குறுக்கே படகு போக்குவரத்து அல்லது நடைபாலம் அமைக்க வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு ஏற்க கடைகள், சிறுவர்கள் விளையாட்டு பூங்கா அமைத்தல், சுற்றுலா பயணிகள் தங்கி ஓய்வு எடுக்க விடுதிகள் என கட்டி விட்டால், பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் இங்கு கண்டிப்பாக வருவார்கள். இதற்கான முயற்சியை சுற்றுலா துறை எடுக்க வேண்டும் என்றார்.

மேம்படுத்த தயாராக உள்ளோம்

கிள்ளை பேரூராட்சி மன்ற துணை தலைவர் கிள்ளைரவீந்திரன் கூறுகையில், எம்.ஜி.ஆர். திட்டு கிராமம் சுனாமி என்னும் பேரலையால் பாதிக்கப்பட்டது. ஆகவே அதை சுற்றுலா தலமாக மாற்றினால், சுனாமி பாதிப்பு குறித்த விளக்க கண்காட்சியையும் வைக்க வேண்டும்.

பேரூராட்சிகள் துறை நிதி ஒதுக்கீடு செய்தால், நாங்களே அந்த பகுதியை மேம்படுத்த தயாராக இருக்கிறோம். சுற்றுலா துறை சுற்றுலா தலமாக மேம்படுத்தினாலும், அப்பகுதி மக்கள், பேரூராட்சிக்கு வருமானம் தரக்கூடிய வகையில் உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்