பராமரிப்பின்றி கிடக்கும் கும்பேஸ்வரர் பூங்கா புதுப்பொலிவு பெறுமா?
கும்பகோணத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் கும்பேஸ்வரர் பூங்கா புதுப்பொலிவு பெறுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.;
கும்பகோணம்:
கும்பகோணத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் கும்பேஸ்வரர் பூங்கா புதுப்பொலிவு பெறுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆதிகும்பேஸ்வரர் கோவில்
கோவில்களில் நகரமாக விளங்கும் கும்பகோணத்தின் பிரதான கோவிலாக ஆதிகும்பேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவில் 1,600 ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். இங்கு மூலவராக இருக்கும் ஆதி கும்பேஸ்வரர் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கம் என தல வரலாறு கூறுகிறது. இந்த சுயம்பு லிங்கத்துக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தைலாபிஷேகம் நடக்கும்.
இத்தகைய பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கும்பேஸ்வரர் பூங்கா
இவர்களுக்காக கடந்த 2009-ம் ஆண்டு கோவில் அருகே கும்பேஸ்வரர் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் நடைபாதை, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள், மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.
இதனால் கோவிலுக்கு வருபவர்கள், அந்த பகுதி மக்கள் மிகவும் பயனடைந்து வந்தனர். நாளடைவில் பூங்கா முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து கிடைக்கிறது.
சேதமடைந்து கிடக்கிறது
தற்போது பூங்காவில் இருந்த விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் மற்றும் நடைபாதை முழுவதும் சேதமடைந்து கிடக்கிறது. மழைநீர், குப்பைகளும் பூங்காவில் தேங்கி உள்ளன. இதன்காரணமாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பூங்காவை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.
இதன்காரணமாக தற்போது பூங்கா கால்நடைகளின் தங்குமிடமாக மாறிவருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கும்பேஸ்வரர் கோவில் பூங்காவை சீரமைத்து புதுப்பொலிவு பெற வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.