புத்துயிர் பெறுமா? சுற்றுலா வாகன தொழில்

புத்துயிர் பெறுமா? சுற்றுலா வாகன தொழில்;

Update: 2022-09-29 18:45 GMT

ஊட்டி

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் இயற்கை எழிலுக்கு பஞ்சமில்லை. இங்கு வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்ல வாடகை வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த தொழில், நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக பரவி வந்த கொரோனா வைரசால், அவர்களது வாழ்வாதாரம் பாதித்துள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்தாலும், அவர்களது வாழ்வாதாரம் இன்னும் மீளவில்லை. இதுகுறித்து சுற்றுலா வாகன தொழிலை சார்ந்தவர்கள் கூறியதை காணலாம்...

பணப்புழக்கம் இல்லை

லாரன்ஸ்(வாடகை கார் டிரைவர்):-

கொரோனா பரவல் காரணமாக மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. கடந்த 2 ஆண்டுகளில் எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய கூடுதல் நேரம் பணியாற்றி வருகிறோம். ஆனாலும் மக்களிடத்தில் பணப்புழக்கம் அதிக அளவில் இல்லாததால் வாடகை காரில் செல்வதை விட தற்போதைய சூழ்நிலையில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் சென்று விடுகின்றனர்.

இதற்கிடையே ஊட்டியில் இருந்து தொட்டபெட்டா, பைக்காரா உள்ளிட்ட பகுதிகளுக்கு வாடகை கார்கள் மட்டும் தான் இயக்க வேண்டும். ஆட்டோக்கள் செல்லக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனாலும் பெரும்பாலான ஆட்டோக்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் வெளியிடங்களுக்கு செல்வதால் எங்களுக்கு சரியான சவாரி கிடைப்பதில்லை.

வாடகை கார்களுக்கான உதிரி பாகங்கள் விலை அதிகரித்துள்ளது. சமீபத்தில் காரின் முன் பகுதி விளக்குகளை மாற்ற புதிதாக ரூ.7000-க்கு வாங்கினால், ஜி.எஸ்.டி. மட்டும் ரூ.526 கூடுதலாக வருகிறது.

விலைவாசி அதிகரிப்பு

கோவர்த்தனன், ஊட்டி சுற்றுலா கார், சுமோ, மேக்சி கேப் சங்க தலைவர்:-

கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்து, அதில் இருந்து தற்போது மீண்டு வரும் நிலையில், பிரபல தனியார் நிறுவன டாக்சிகளால் எங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. கோவை உள்ளிட்ட சமவெளி பகுதியில் இருந்து வரும் வாடகை வாகனங்கள் இங்கிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் அதையும் மீறி அவர்கள் திரும்ப செல்லும்போது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கின்றனர். இதனால் எங்களுக்கு சவாரி கிடைப்பதில்லை.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் விலைவாசி அதிகரித்துள்ள அளவுக்கு மக்களிடம் பொருளாதார பலம் இல்லை. அதனால் சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் கூட வாடகை வாகனத்தை தவிர்த்து விடுகின்றனர்.

எரிபொருள் விலை

சண்முகம்(ஆட்டோ டிரைவர்கள் சங்க மாவட்ட தலைவர்):-

கொரோனா காரணமாக ஏற்பட்ட பிரச்சினைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வாடகை வாகனங்கள் பெரும்பாலும் வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களில் கடன் மூலம் தான் வாங்கப்படுகிறது.

கொரோனா பாதிப்பின் போது வங்கி கடன் தவணையை தாமதமாக செலுத்தலாம் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் தாமதமாக கடன் தொகை கட்டும் போது அதற்கும் கூடுதல் வட்டி பணம் கட்ட வேண்டி இருந்தது.

மேலும் பெட்ரோல், டீசல் உள்பட எரிபொருட்கள் விலை அவ்வப்போது உயர்த்தப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் நாங்கள் கட்டணத்தை உயர்த்தினால் பொதுமக்கள் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். ஒருவழியாக போராடி தான் அவர்களிடம் கூடுதல் கட்டணம் வாங்க முடிகிறது.

போலீசார் கெடுபிடி

பிரகாஷ்(மினி வேன் உரிமையாளர்):-

கடந்த 2 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கி கிடந்ததால் மன அழுத்தத்தில் இருந்த பொதுமக்கள் தற்போது சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கிற்கு வெளியூர் செல்கின்றனர். ஆனால் மற்ற மாவட்டங்களை விட நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களுக்கு கட்டணம் அதிக அளவில் உள்ளது. மேலும் ஊட்டியில் பார்க்கிங் வசதி சரிவர கிடையாது.

அதேபோல் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்கப்படுகிறது. மேலும் இன்சூரன்ஸ், எப்.சி. கட்டணங்கள் அதிகரித்துவிட்டது. ஆனால் அதற்கு ஏற்றார் போல் வாடகையை நாங்கள் உயர்த்தினால் பொதுமக்கள் மீண்டும் எங்களை சவாரிக்கு கூப்பிட தயங்குகின்றனர்.

மேலும் மினி வேன்களில் சுற்றுலா வந்தால் போலீசார் சோதனை என்ற பெயரில் அதிகம் கெடுபிடி காட்டுகின்றனர். கொரோனா ஓய்ந்த பிறகும் இயல்பு நிலை திரும்பவில்லை. விரைவில் சுற்றுலா வாகன தொழில் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்