உழவர் சந்தைகள் புத்துயிர் பெறுமா?

உழவர் சந்தைகளை புத்துயிர் பெறச்செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Update: 2022-10-25 18:22 GMT

உழவர் சந்தை

நாட்டின் முதுகெலும்பான விவசாய தொழிலை பேணிக்காப்பதற்காக மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து திட்டங்களை நிறைவேற்றி வந்தாலும், சில திட்டங்கள்தான் பேசப்படுகின்றன. வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி, மதுரை மாவட்டம் அண்ணாநகரில் கடந்த 1999-ம் ஆண்டு நவம்பர் 14-ந்தேதி தொடங்கி வைத்த உழவர் சந்தை திட்டம் உன்னத திட்டமாக போற்றப்பட்டது.

இந்த திட்டத்தின் நோக்கம், விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்களை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் நேரடியாக மக்களிடம் விற்பனை செய்து நல்ல லாபம் அடைய வேண்டும். மக்களும் மனநிறைவு பெற வேண்டும் என்பதுதான். ஆரம்பத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்த இந்த சந்தை கடந்த 10 ஆண்டுகளாக அடையாளத்தை இழந்து கால்நடைகள் கட்டவும், வாகனங்களை நிறுத்தவும், மது பிரியர்கள் சங்கமிக்கும் இடமாகவும் மாறியது.

இந்த நிலையில் தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் இந்த திட்டத்துக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்முரம் காட்டியதால் உழவர் சந்தைகள் மீண்டும் புதுப்பொலிவு பெற்றன.

4-ல் ஒன்று மட்டுமே செயல்படுகிறது

இந்நிலையில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டாலும், அரியலூர், ஜெயங்கொண்டம், வேப்பந்தட்டை ஆகிய 3 இடங்களிலும் உழவர் சந்தைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் பெரம்பலூர் உழவர் சந்தை தற்போதும் செயல்பட்டு வருகிறது. அதாவது பெரம்பலூர் மாவட்டத்தில் முதன்முதலில் கடந்த 2000-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பலூர் மதனகோபாலசுவாமி மற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 40 சென்ட் நிலத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் உழவர் சந்தை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இந்த சந்தை தினமும் காலை 6.15 மணி முதல் மதியம் 12 மணி வரை திறக்கப்படுகிறது. உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்தவர்கள் அமர்ந்து காய்கறிகள் விற்பனை செய்ய 74 கடைகள் உள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் அதிக அளவில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

இந்த உழவர் சந்தைக்கு பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் சாகுபடி செய்த காய்கறிகளை கொண்டு வந்து வியாபாரம் செய்து வருகின்றனர். பெரம்பலூர் நகர்ப்பகுதியில் பெரும்பாலானோரும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும் தினமும் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

பயன்பாட்டில் இல்லாத உழவர் சந்தைகள்

அரியலூர் நகரில் ஜெயங்கொண்டம் சாலையில் கடந்த 2000-ம் ஆண்டு ெசப்டம்பர் மாதம் 23-ந் தேதி உழவர் சந்தை தொடங்கப்பட்டது. இந்த சந்தையில் 50 கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. இதன்மூலம் உழவர்களின் வாழ்க்கையும் மேம்பட்டது. பொதுமக்களும் தங்களுக்கு தேவையான தரமான காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் உள்ளிட்டவற்றை விலை மலிவாக பெற்றனர். ஆனால் காலப்போக்கில் இந்த உழவர் சந்தை செயலற்று போனது. சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறும் நிலை உள்ளது. எனவே இந்த உழவர் சந்தையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இது குறித்து அரியலூரை சேர்ந்த விவசாயி வடிவேல் கூறுகையில், நான் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். எனது விவசாய நிலத்தில் கத்தரி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை பயிர் செய்து விற்பனை செய்து வருகிறேன். ஆனால் தினமும் விளையும் காய்கறிகளை விற்பனை செய்வதற்கு திருச்சி அல்லது கும்பகோணம் சந்தைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து செலவு அதிகமாகி எங்களது லாபம் குறைகிறது. மேலும் நாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக பொதுமக்களிடம் நாங்களே விற்பனை செய்தால் எங்களுக்கு லாபம் கிடைப்பதோடு, பொதுமக்களும் லாபம் அடைகின்றனர். எனவே அரியலூரில் உள்ள உழவர் சந்தையை செயல்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டத்தில் திருச்சி-சிதம்பரம் சாலையில் மார்க்கெட் கமிட்டி அருகே உழவர் சந்தை திறக்கப்பட்டு, செயல்பட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சந்தை செயல்படாத நிலையில் உள்ளது. இப்பகுதியில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட், வாரச்சந்தை போன்றவற்றுக்கு பொதுமக்கள் பெரும்பாலும் சென்று காய்கறிகளை வாங்கிவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் உழவர் சந்தையில் போதிய வியாபாரம் இல்லாமல், குறைந்த அளவே காய்கறிகள் விற்பனையானதால் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருவதை தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேறு இடத்தில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்