வடகாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்களா?

வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.எனவே இரவு நேரத்தில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-04-08 17:16 GMT

ஆரம்ப சுகாதார நிலையம்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி விவசாயம் சார்ந்த் பகுதியாகும். இங்குள்ள விவசாயிகள் ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக, தென்னை, மா, பலா, நெல், வாழை, கரும்பு, கடலை, கத்தரி, மிளகாய், உளுந்து, எள் உள்ளிட்ட பயிர் வகைகளையும், மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, ரோஜா, பிச்சி, சென்டி உள்ளிட்ட எண்ணற்ற மலர் வகைகளையும் சாகுபடி செய்து வருகின்றனர்.இந்நிலையில் வடகாட்டில் பொதுமக்கள் நலன் கருதி 24 மணி நேரமும் செயல்படும் வகையில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது.அதில் அப்பகுதி நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோரிக்கை

ஆனால் இங்கு இரவு நேரங்களில் மருத்துவர்கள் தங்கி மருத்துவம் பார்ப்பது இல்லை எனவும் கூறப்படுகிறது. இரவு நேரங்களில் உரிய மருத்துவர்கள் இல்லாமல் ஓரிரு செவிலியர்கள் மட்டுமே இருப்பதாகவும், அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு கூட உரிய முறையில் சிகிச்சை அளிக்க முடியாமல் அலைக்கழிக்கப்படுவதாகவும், இப்பகுதி மக்கள் வருத்தப்பட்டு வருகின்றனர். எனவே இந்த மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முழு நேரமும் மருத்துவர்கள் உடனிருந்து அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

பேருதவியாக இருக்கும்

மாங்காடு பகுதியை சேர்ந்த கண்ணன்:- வடகாடு பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கொண்டு வரப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முழு நேரமும் மருத்துவர்கள் இருக்க வேண்டும். மேலும் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்தால் இப்பகுதி மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.

முழு நேரமும் மருத்துவர்கள்

வடகாடு பகுதியை சேர்ந்த தண்டாயுதபாணி:- வடகாடு பகுதிகளில் அதிகப்படியான விவசாய பணிகள் ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக நடைபெற்று வருகின்றன. இரவு நேரங்கள் மற்றும் வயல் வெளிகளில் சுற்றித்திரியும் விஷப்பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் பலரை கடித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு சில விவசாயிகள் உரிய நேரத்திற்கு சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்த பரிதாப சம்பவங்கள் கூட நடந்துள்ளது. இதனால் முழு நேரமும் அரசு மருத்துவர்கள் இங்கு தங்கி பணிபுரிய துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேதனை அளிக்கிறது

வடகாடு பகுதியை சேர்ந்த விவசாயி வீரமுத்து:- அரசு மருத்துவமனைகள் இப்போதெல்லாம் பெயரளவிற்கு மட்டுமே செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான கிராமப்புற பகுதிகளில் ஒரு சில குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே அரசு மருத்துவர்கள் மருத்துவமனைகளுக்கு வந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் தங்களது சொந்த மருத்துவமனை மற்றும் பிற தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று விடுகின்றனர். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இல்லாமல் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.

வடகாடு பகுதியை சேர்ந்த துரைராஜ்:- தற்போது எந்த வகையில் எப்படி நோய் வருவது எனத்தெரியாமல் பொதுமக்கள் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே அதற்கு ஏற்றார் போல் மருத்துவர்கள் கிராமப்புற பகுதிகளிலும் தயக்கம் இன்றி பணியாற்ற முன்வர வேண்டும்.மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்களை அரசு நியமிக்க வேண்டும்.அவ்வாறு நியமிக்கும் பட்சத்தில் பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்