சேதமடைந்த பருத்தி செடிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுமா?

வயலுக்குள் மழைநீர் புகுந்ததால் சேதமடைந்த பருத்தி செடிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2022-11-13 20:04 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

வயலுக்குள் மழைநீர் புகுந்ததால் சேதமடைந்த பருத்தி செடிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

பருத்தி சாகுபடி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாச்சியார்பட்டி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கண்மாய், குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாச்சியார்பட்டி பகுதியில் பருத்தி மற்றும் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் மழைநீர் புகுந்து குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள பருத்தி செடிகள் அழுக ஆரம்பித்து விட்டன.

நிவாரணத்தொகை

இதுகுறித்து நாச்சியார்பட்டியை சேர்ந்த விவசாயி சீனிவாசன் கூறியதாவது:-

விவசாய தொழில் நலிவடைந்து வரும் நிலையில், பருவ நிலை மாற்றத்தால் பலர் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். பல இன்னல்களுக்கு இடையே விவசாயம் செய்து வருகிறோம். இந்தநிலையில் தற்போது நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி பருத்தி செடிகள் அழுக ஆரம்பித்து விட்டது.

இதனால் விவசாயிகளுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மழை பாதிப்புகளுக்கு நிவாரணம் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் மற்றும் யூனியன் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளோம். எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் பார்வையிட்டு நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்