வழக்காடும் மொழியாக தமிழை கொண்டு வந்தால் நன்மை தருமா?

ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக தமிழை கொண்டு வருவது குறித்து வக்கீல்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2022-12-06 20:14 GMT

ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக தமிழை கொண்டு வரும் பட்சத்தில் அது நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்மை தருமா? பாதிப்பு வருமா? என்பது குறித்து கேட்டபோது வக்கீல்கள் தங்களது கருத்துகளை கூறியுள்ளனர்.

சாமானியனுக்கு தெரியாது

ஆங்கில வார்த்தைகள் இப்போது தமிழ்மொழியுடன் கலந்து அதிகம் உச்சரிக்கப்பட்டாலும், பல கடினமான ஆங்கில சொற்களுக்கு இன்றும் விளக்கம் தெரியாதவர்கள் பலர் உள்ளனர். அதுவும் சட்டம் தொடர்பான ஆங்கில சொற்களுக்கு கூடுதல் விளக்கம் தேவைப்படுகிறது. நீதி கேட்டு ஐகோர்ட்டுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் சாமானிய மனிதன் சென்றால், அங்கு நடைபெறும் வழக்கு விசாரணை குறித்து அவருக்கு எதுவும் தெரியாது.

தன் வக்கீலும், எதிர்தரப்பு வக்கீலும், நீதிபதியின் முன்பு செய்யும் ஆங்கில வாதத்தை புரிந்துகொள்ள முடியாது. அன்னிய மொழியில் நடைபெறும் இந்த வாதத்தில், தான் கொடுத்த விவரங்களை எல்லாம் நீதிபதியிடம் தன் வக்கீல் எடுத்துக்கூறினாரா? என்றும் தெரியாது.

ஜனாதிபதி அதிகாரம்

ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 348-வது பிரிவு, சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளில் ஆங்கிலம் மட்டும்தான் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. அதேநேரம் 348 (2) ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக அந்தந்த மாநில மொழியை அறிவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என்கிறது. இந்த அதிகாரத்தின்படிதான் அலகாபாத், பாட்னா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 ஐகோர்ட்டுகளில் வழக்காடும் மொழியாக இந்தி உள்ளது. எனவே, சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் தமிழை வழக்காடும் மொழியாக ஜனாதிபதி அறிவித்தால், என்னென்ன விளைவுகள் ஏற்படும்? இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் வக்கீலிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது.

பரிகாரம்

ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பரமராஜ்:-

ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் வாதி, பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பார்த்தே அதன் உண்மை தன்மையை முடிவு செய்து விடுவார்கள். வக்கீல்களை பொறுத்தமட்டில் கட்சிக்காரர்களுக்கு பரிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு ஆஜராகின்றனர். எனவே தங்கள் கட்சிக்காரர்கள் அவர்கள் வாய்ப்புள்ள வழியில் வாதாட வேண்டிய அவசியமான நிலையில் உள்ளனர். மேலும் வழக்கு ஆவணங்கள் எல்லாமே ஆங்கிலத்தில் இருக்கும் போது அதனை தமிழ்படுத்துவது என்பது மிகுந்த சிரமத்திற்குரியதாகும். வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வர வேண்டும் என்று பேசப்பட்டுவரும்நிலையில் அதனால் கால விரயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

நீதிபதிகள் ஏற்கனவே வக்கீல்களாக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள். எனவே அவர்களுக்கு எந்த மொழியில் வாதாடினாலும் வழக்கின் தன்மை குறித்தும், வாதாடுவதில் உள்ள கருத்துக்கள் குறித்தும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய திறமை உள்ளது. 100 வக்கீல்களில் திறமை வாய்ந்த 10 வக்கீல்களே நீதிபதியாகும் வாய்ப்பை பெறுகின்றனர். எனவே வழக்காடு மொழியாக ஆங்கிலம் இருத்தால் நன்மை பயக்கும். தமிழில் விரும்புவோர் வேண்டுமானால் வாதாடி கொள்ளலாம் என்று அனுமதி வழங்கலாம்.

வாதாடுவதில் சிரமம்

ஓய்வு பெற்ற சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி வெங்கடசாமி:- ஐகோர்ட்டில் பணியாற்றும் நீதிபதிகளில் 10 சதவீதம் பேர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். ஐகோர்ட்டில் வாதாடும் மூத்த வக்கீல்களில் பெரும்பாலானோருக்கு தமிழ் தெரிய வாய்ப்பில்லை. அவர்கள் ஆங்கிலத்திலேயே வாதாடுகிறார்கள். தமிழ் தெரிந்திருந்தாலும் அவர்களுக்கு ஆங்கிலத்தை போல் சரளமாக தமிழில் வாதாட வாய்ப்பு இல்லை. தற்போது வழக்குகளில் ஆஜராகும் இளம் வக்கீல்களில் பலருக்கு ஆங்கிலத்தில் சரளமாக வாதாட சிரமமாக இருக்கும் நிலையே உள்ளது. வழக்கு ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் யாவும் ஆங்கிலத்திலேயே இருந்து வந்துள்ள நிலையில் அந்த நடைமுறையே பலருக்கும் வசதியாக இருக்கும். ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக ஆங்கிலமே தொடர்வது நல்லது. அனைவருக்கும் விரைவில் வழக்குகளில் தீர்வு கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். வேண்டுமானால் விரும்புவோர் தமிழில் வாதாடிக்கொள்ளலாம்.

பக்கபலம்

ஸ்ரீவில்லிபுத்தூர் மூத்த வக்கீல் ராஜம்மாள்:- வக்கீல்கள் தமிழில் வழக்காடும் பொழுது பாமர மக்களும் எளிதில் புரியும் படியாக இருக்கும். மேலும் நமது தாய் மொழியான தமிழில் வாதாடுவது யாவருக்கும் எளிது. தமிழில் பேசும் போது நமது தாய், நமது பக்கத்தில் இருப்பது போன்று பக்கபலமாக இருக்கும். தமிழகத்தை சேர்ந்த வக்கீல்களுக்கு தமிழில் வாதாடுவது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழி வழக்காடு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழியாகும். நீதியை உலகிற்கே வழங்கிய நாடு தமிழ்நாடு, புராண காலங்களில் நீதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது தமிழ் மொழி.

Tags:    

மேலும் செய்திகள்