பேரளி கிராமத்தில் அடிப்படை வசதி ஏற்படுத்தப்படுமா?

பேரளி கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-19 18:30 GMT

பேரளி ஊராட்சி

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பேரளி ஊராட்சியில் பேரளி, மருவத்தூர், பனங்கூர் ஆகிய சிற்றூர்கள் உள்ளன. பேரளி கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தெற்கு தெரு, நடுத்தெரு, வடக்கு தெரு, கிழக்கு தெரு உள்ளிட்ட தெருக்கள் உள்ளன. இதில், தெற்கு தெரு அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகும்.

தெற்கு தெருவில் இருந்து இணைப்பு சாலையாக உப்பு கிணறு வீதி உள்ளது. இதில் உப்பு கிணறு வீதி தெற்கு தெருவில் இருந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வரை சுமார் 500 மீட்டர் மண் சாலையாக உள்ளது. இந்த சாலை சுமார் 15 ஆண்டுகளாக மண் சாலையாக உள்ளது.

குளம் போல் தேங்கும் கழிவுநீர்

இந்த மண் சாலை வழியாக ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கும், கால்நடை மருத்துவமனைக்கும், சுடுகாடு பகுதிக்கும், வயலுக்கு செல்லக்கூடிய பாதையாகவும் அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக நாள்தோறும் ஏராளமானோர் சென்று வருகிறார்கள். இதேபோல் எம்.ஜி.ஆர். நகர் மாணவ- மாணவிகள் பள்ளிக்கு செல்ல இந்த மண் சாலையை பெரிதும் பயன்படுத்துகின்றனர்.

இந்த மண் சாலையை விட்டால் மாற்றுப்பாதையாக 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி வர வேண்டும். மண் சாலை பகுதியில் சுமார் 300 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரப்படாததால் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் மழை நீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்கி நின்று மண் சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. சுமார் 20 அடி அகலம் உள்ள மண்சாலையில் ஆங்காங்கே குளம் போல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு சுகாதார கேடு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

சுகாதார சீர்கேடு

இந்த சுகாதார சீர்கேடால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் வந்து விடுமோ என்றும் பொதுமக்கள் அஞ்சுகின்றனர். வீடுகளில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் கலர் மாறி விடுகின்றன. எனவே இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

ஆனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகிறார்கள். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

கொசுக்கடி

வசந்தா:- சாலைகளின் அருகிலேயே குப்பைகள் கொட்டுவதாலும், கழிவு நீர் தேங்கி நிற்பதாலும் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எங்கள் பகுதியில் 4 ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து உள்ளோம். அதில் இருந்து எடுக்கப்படும் நீர் செந்நிறத்தில் வருகிறது. இதனால் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து வரும் தண்ணீரை எதற்கும் பயன்படுத்த முடியவில்லை. மேலும் கொசுக்கள் அதிகம் உள்ளதால் சிறுவர்களின் கால்களில் அலர்ஜி ஏற்பட்டு புண்ணாக மாறி விடுகிறது. இதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி சிகிச்சை பெற்று வருகிறோம். அதேபோல் ஏழை பள்ளி மாணவ-மாணவிகள் வெறும் காலுடன் பள்ளிக்கு நடந்து சென்று வருவதால் அவர்களுக்கு தொற்று நோயும் ஏற்படுகிறது. மேலும் பெண்களாகிய நாங்கள் வயல்களில் இருந்து மாட்டிற்கு தீவனமாக புல் மற்றும் சோள தட்டைகளை குண்டும், குழியுமான சாலைகளில் மிகவும் சிரமத்துடன் எடுத்து வருகிறோம். எனவே பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் நலன் கருதியாவது இப்பகுதியில் சாலை அமைக்க வேண்டும். மேலும், கழிவுநீர் தேங்காமல் இருக்க இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும்.

சிமெண்டு சாலை

சிவக்குமார்:- நாங்கள் நீண்ட காலமாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். அவசர தேவைக்கு எங்கள் பகுதிக்கு ஆட்டோவோ அல்லது காரோ உள்ளே வர முடியாமல் மெயின் ரோட்டில் நிற்க வேண்டிய சூழ்நிலையே உள்ளது. நோய்வாய்ப்பட்டவர்களை வாகனத்திற்கு தூக்கி செல்லக்கூடிய நிலையே உள்ளது. இப்பகுதியில் யாரேனும் இறந்து விட்டால் கூட மெயின் ரோட்டிற்கு தூக்கிக் கொண்டு தான் வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. மழைக்காலங்களில் மிகவும் சிரமமாகவும் உள்ளது. வீடுகளுக்கு எடை அதிகமான பொருட்கள் எடுத்துச் செல்லவும் முடியாமல் உள்ளது. எனவே இப்பகுதியில் விரைந்து, அடிப்படை வசதியான சாக்கடை வசதியுடன் கூடிய சிமெண்டு சாலைஅமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்