கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் செய்யப்படுமா?

கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் செய்யப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Update: 2022-12-10 18:45 GMT

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி பாப்பான் கால்வாய் கரையோரத்தில் 1¼ ஏக்கர் பரப்பளவில் கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

92 படுக்கைகள் வசதி 

ராஜாஜி, காமராஜர், பக்தவச்சலம் ஆகியோரின் ஆட்சி காலத்தில் கடையநல்லூரை சேர்ந்த ஸ்தல ஸ்தாபன அமைச்சராக இருந்த மந்திரி மஜித் சாகிப் முயற்சியால் 33 படுக்கைகளுடன் ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக விரிவாக்க கட்டிடங்கள் கட்டப்பட்டது. 2009-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் முயற்சியால் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டது. தற்போது 92 படுக்கைகளுடன் இந்த ஆஸ்பத்திரி செயல்படுகிறது.

ஆஸ்பத்திரியில் வெளி நோயாளிகள் பிரிவு, பல் மருத்துவம், ஸ்கேன் சென்டர், இ.சி.ஜி., ஐ.சி.யு., பெண்கள் புறநோயாளிகள் பகுதி, ஊசி போடும் இடம், மருந்தகம், ஆய்வுக்கூடம், சமையல் அறை, டயாலிசிஸ் சென்டர், மருந்துக்கிடங்கு, நுண்கதிர் பிரிவு, குடும்ப நலப்பிரிவு, பேறுகால பின் கவனிப்பு பிரிவு, பேறுகால பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கு, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு, பெண்கள்-ஆண்கள் உள் நோயாளிகள் பகுதி மருந்து கட்டும் அறை உள்ளிட்டவை உள்ளன. ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவர் அனிதா பாலின் உள்பட 11 டாக்டர்கள் பணியாற்றுகிறார்கள். தினமும் சுமார் 600 பேர் வெளி நோயாளிகளாகவும், 70 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.

அடிப்படை வசதிகள்

ஆனால் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி நோயாளிகள் கூறியதாவது:-

கோடை காலங்களில் நோயாளிகளுக்கு தேவையான தண்ணீர் வசதி போதுமான அளவு கிடைப்பதில்லை. இதன் காரணமாக சில வார்டுகளில் கழிவறைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே ஆஸ்பத்திரியில் ஒரு புதிய மேல்நிலை தொட்டி அமைக்க வேண்டும். இதேபோல, ஆஸ்பத்திரியில் 2 ஜெனரேட்டர்கள் மட்டுமே உள்ளன. இதன்மூலம், இதய சிகிச்சை பிரிவு உள்பட 70 சதவீத பகுதிகளுக்கு மட்டுமே மின்சாரம் வழங்க முடிகிறது. மாதாந்திர பராமரிப்புக்கான மின் தடை நாட்களில் மின்சாரம் கிடைக்காத வார்டு நோயாளிகள் சிரமப்படுகிறார்கள். எனவே தடையில்லா மின்சாரம் வழங்க மேலும் ஒரு ஜெனரேட்டர் அமைக்க வேண்டும்.

அமைச்சரிடம் மனு

கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான்:-  அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், மகப்பேறு பிரிவு, சமையலறை போன்ற பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இவை அனைத்தும் சிதிலம் அடைந்து விட்டன. அறுவை சிகிச்சை அரங்கில் மின் சாதனங்கள் பழுதடைந்து உள்ளன. இவைகளை சரி செய்ய முடியாத நிலையில் உள்ளது.

எனவே இவை அனைத்தையும் இடித்துவிட்டு புதியதாக கட்டிடம் கட்ட வேண்டும் என கடையநல்லூருக்கு வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியனிடம் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளேன்.

புதிய கட்டிடங்கள்

கடையநல்லூரை சேர்ந்த பெருமாள் துரை:- கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வேண்டும். 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கொதிநீர் எந்திரம் போன்ற வசதிகள் வேண்டும். நவீன சமையலறை கூடம் அமைக்க வேண்டும். கூடுதல் சிறப்பு மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும்.

ஹைதர் அலி:- சித்தா மருத்துவமனை அருகே உள்ள காலி இடத்தில் ஆஸ்பத்திரிக்கு புதிய கட்டிடங்களை கட்ட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. எனவே புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும்.

தரம் உயர்த்த வேண்டும்

ஓய்வு பெற்ற அரசு டாக்டர் சேக் முஹம்மது:- கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியை தாலுகா அந்தஸ்தில் உடனடியாக தரம் உயர்த்த வேண்டும். சிவகிரியில் இருந்து தென்காசி வரை குற்றால சீசன் காலங்களில் அதிகளவில் விபத்துகள் நடைபெறுகின்றன. கடையநல்லூருக்கு விபத்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை நெல்லைக்கு திருப்பி விடும்போது வழியிலேயே உயிர் இழப்புகள் அதிக அளவில் ஏற்படுகிறது.

எனவே கடையநல்லூர் அரசு மருத்துவமனையை தாலுகா அந்தஸ்துக்காவது உயர்த்தி தேவையான கட்டிடங்கள், மருத்துவ உபகரணங்கள் வசதி ஏற்படுத்தி, டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும்.

தலைமை மருத்துவர்

அரசு தலைமை மருத்துவர் அனிதா பாலின்:- கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் எல்லா நாட்களிலும் சிறுநீரக கோளாறு உள்ள நபர்களுக்கு 4 டயாலிஸ் கருவிகள் மூலம் நாள் ஒன்றுக்கு 8 நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது. தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு மாரடைப்பு, சுவாச கோளாறு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வாரத்தில் ஒரு நாள் எலும்பு முறிவு அறுவை சிகிச்சையும், வாரத்தில் இரண்டு நாட்கள் பொது அறுவை சிகிச்சையும், குடல்வால் அலர்ஜி, குடலிறக்கம், ஆறாத புண்கள் போன்றவற்றிக்கு சிறப்பு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இதுபோல் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்