அரியலூர் நகராட்சி விஸ்தரிப்பு செய்யப்படுமா?

அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் தொடா்ந்து பின்னடைவு ஏற்படுவதால் அரியலூர் நகராட்சியை விஸ்தரிப்பு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Update: 2023-02-22 18:11 GMT

அரியலூர் நகராட்சி

அரியலூரானது 21-12-1943 அன்று இரண்டாம் கிரேடு டவுன் பஞ்சாயத்து ஆகவும், 01-01-1955 முதல் நகரப் பஞ்சாயத்து ஆகவும், 01-04-1966 அன்று தேர்வு தர டவுன் பஞ்சாயத்து ஆகவும் இருந்தது. இதையடுத்து 01-10-2004 முதல் சிறப்பு கிரேடு டவுன் பஞ்சாயத்து ஆக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் 16-12-2004 முதல் 3-ம் தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

இதையடுத்து கடந்த 09-08-2010 முதல் இரண்டாம் தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அரியலூர் நகராட்சியானது 7.62 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. தற்போது அரியலூா் நகராட்சி 2-ம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. கடந்த 1991-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் 18 வாா்டுகளாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அரியலூா் நகராட்சியில் கடந்த 32 ஆண்டுகளில் மக்கள்தொகை கணிசமாக உயா்ந்தபோதும், அரியலூா் நகராட்சியில் மட்டும் அதே 18 வாா்டுகளே நீடித்து வருகின்றன. தரமும் உயா்த்தப்படவில்லை.

18 வாா்டுகள் மட்டும்...

கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அரியலூா் நகரின் மக்கள் தொகை 28,862 ஆகும். மக்கள் தொகை 25 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ள பேரூராட்சிகள், நகராட்சிகளில் வாா்டுகளின் எண்ணிக்கை 21 ஆக இருக்க வேண்டும் என நகராட்சிகள் நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் (தோ்தல் பிரிவு) அரசாணை தெரிவிக்கிறது. ஆனால் அரியலூா் நகராட்சியில் மட்டும் 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வாா்டு எண்ணிக்கை கணக்கிடப்பட்டு தோ்தல் நடத்தப்பட்டு வருகிறது.

பேரூராட்சிகளில் கூட 21 வாா்டுகள் உள்ள நிலையில், மாவட்ட தலைநகரம் அமைந்துள்ள அரியலூரில் உள்ள நகராட்சியில் 18 வாா்டுகள் மட்டும் இருப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு புறம்பானதாக உள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூா் நகராட்சியுடன், சுற்றுப்புறங்களிலுள்ள 13 ஊராட்சிகளை இணைப்பதற்கான பரிந்துரை கிடப்பில் போடப்பட்டது. இதன் காரணமாக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் தொடா்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

12 ஆண்டுகளுக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்டது

அரியலூரை சேர்ந்த சந்திரசேகர்:- ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆயுதப்படை வளாகம், காவலா் குடியிருப்பு, அரசு மருத்துவக் கல்லூரி, அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு ஆகிய இடங்களுக்கு குடிநீா் வினியோகித்தாலும் நகராட்சிக்கு எவ்வித வருவாயும் கிடைப்பதில்லை. இதேபோல், பெரும்பாலான தனியாா் பள்ளி, கல்லூரிகள், சிமெண்டு ஆலைகள், பல்நோக்கு மருத்துவமனைகள் உள்ளிட்டவை நகர எல்லையையொட்டியுள்ள ஊராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற காரணங்களால் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதற்குத் தீா்வு காணும் வகையிலும், நகராட்சியின் வளா்ச்சிக்கு உதவும் வகையிலும் ஒருங்கிணைந்த காய்கனி மற்றும் பஸ் நிலையம் விரிவாக்கம் உள்ளிட்ட வசதிகளை உருவாக்கவும் நகராட்சிக்கான எல்லை விரிவாக்கம் அவசியமாகிறது. ஆகவே அரியலூா் நகரைச் சுற்றியுள்ள எருத்துக்காரன்பட்டி, வாலாஜா நகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், வெங்கடரமணபுரம், தாமரைக்குளம், கோவிந்தபுரம், ஓட்டக்கோவில், அம்மாகுளம், தவுத்தாய்குளம், கயா்லாபாத், வாரணவாசி, கீழப்பழுவூா் ஆகிய ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. குறிப்பாக பன்றி வளர்ப்பு, நாய் தொல்லைகள், குரங்குகள் தொல்லைகள் எல்லாம் நீக்க வேண்டும் என்றால் அரியலூர் நகராட்சியை விஸ்தரித்து மேற்கண்ட கிராம ஊராட்சிகளை அரியலூர் நகராட்சியோடு இணைக்க வேண்டும்.

அரசு சலுகைகள்

அரியலூரை சேர்ந்த மாலதி:- அரியலூர் நகராட்சியுடன் எருத்துகாரன்பட்டி பஞ்சாயத்தையும், வாலாஜாநகரம் பஞ்சாயத்தையும் சேர்த்து பெரிதாக மாற்றி மக்களுக்கு சேவைகள் செய்யலாம். பாதாள சாக்கடை இணைப்பு இல்லாத இடங்களுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க வேண்டும். கொள்ளிடம் கூட்டு குடிநீர் இணைப்பு அனைவருக்கும் வழங்க வேண்டும். பொதுமக்கள் சேவை துரிதமாக செயல்பட்டு செய்ய வேண்டும். அரியலூர் நகராட்சியை விரிவு படுத்தும்போது அரசிடமிருந்து அதிக அளவு நிதி கிடைக்கும். அதனை வைத்து பொதுமக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை எளிதாக செய்ய முடியும்.

அரியலூர் நகராட்சியில் பொக்லைன் எந்திரம் இல்லை. ஆனால் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ளது. ஏனெனில் ஜெயங்கொண்டம் நகரம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நகராட்சி விரிவுபடுத்தும் போது நகராட்சி பணியாளர்கள் மற்றும் நகராட்சிக்கு தேவையான அனைத்து எந்திரங்கள் சலுகைகள் அரசிடம் இருந்து எளிதாக பெற முடியும். மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் அரியலூர் நகராட்சியின் மதிப்பு கூடும்.

மக்கள் அவதி

அரியலூரை சேர்ந்த ராஜராஜன்:- தமிழகத்தில் சுதந்திரம் பெற்றபோது அரியலூர் ஊராட்சியின் எல்லையாக எது இருந்ததோ அதே எல்லையில் இன்றும் அரியலூர் நகராட்சி உள்ளது. அரியலூர் தெற்கு கிராமம் மட்டுமே அரியலூர் நகராட்சியின் எல்லையாக உள்ளது. அரியலூர் வடக்கு வருவாய் கிராமம் கூட அரியலூர் நகராட்சியில் சேர்க்கப்படவில்லை.

போதிய அரசியல் பலம் இல்லாததால் அரியலூர் நகராட்சி எல்லை விரிவுபடுத்தப்படவில்லை. அரியலூரில் உள்ள மிக பெரிய பகுதிகளாக உள்ள ஜெ.ஜெ.நகர், அண்ணா நகர், கணபதி நகர், ராயல் சிட்டி, ராஜூவ் நகர் என 10 ஆயிரம் வீடுகள் உள்ள பகுதிகள் அரியலூர் நகராட்சியில் இல்லாததால் போதிய சுகாதாரம், கழிவுநீர் அகற்றுவது, தெரு விளக்கு போன்றவைகள் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

108 ஆம்புலன்ஸ் செல்லக்கூட இடவசதி இல்லை

அரியலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் அருணன்:- அரியலூர் மாவட்டத்தின் தலைநகரமாக கடந்த 2007-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பாக நகராட்சியாக அறிவிக்கப்பட்டு பேரூராட்சியாக இருந்த போது இருந்த அதே 18 வார்டுகள் தான் தற்போது வரை உள்ளது. ஜெயங்கொண்டம் நகராட்சியாக அறிவிக்கப்பட்டபோது அருகில் உள்ள கிராமங்கள் நகராட்சியோடு இணைக்கப்பட்டது. அரியலூர் நகரம் விரிவாக்க வேண்டிய அவசியமான ஒன்று. அப்போதுதான் அரியலூர் நகராட்சி தரத்தை பலப்படுத்திட முடியும். விரிவாக்க எல்லைகள் பல ஆண்டுகளாக ஆய்வில் மட்டுமே உள்ளது. செயல்வடிவம் எப்போது வரும் என்பது தான் கேள்வி.

மாவட்ட தலைநகரம் என்பதால் பல்வேறு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியமாக உள்ளது. சாலை விரிவாக்கம், அரியலூர் பஸ் நிலையம் முதல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரை 108 ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல கூட போதிய இட வசதி இல்லாமல் நெருக்கடி உள்ளது. மாவட்ட தலைநகருக்கான தரத்தை உயர்த்த அரியலூர் நகர விரிவாக்கம் அவசியமான ஒன்று.

அவல நிலை நீடிக்கிறது

தண்டபாணி:- மாவட்டத் தலைநகராக அரியலூர் நகரம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. நகரத்தில் பெரிய பெரிய ஜவுளி கடைகள், தங்க நகை கடைகள், மொத்த வியாபார மளிகை கடைகள், மருத்துவமனைகள், வங்கிகள், இன்சூரன்ஸ் அலுவலகம், என சகல பகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மேற்காணும் வசதிகள் இயங்கி வருகிறது. சுற்றி பல மெகா சிமெண்டு உற்பத்தி ஆலைகள் இயங்கி வருவதால் அதனை சார்ந்தவர்களும், அன்றாடம் அரியலூரை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். நகர்ப்புற உள் சாலைகள் மக்கள் போக்குவரத்து, இருசக்கர வாகன போக்குவரத்து, இலகுரக, கனரக வாகன போக்குவரத்தினால் திணறிக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு நெருக்கடி மிகுந்த சூழலில் நகரத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் விஸ்தரிக்கப்படவோ, மேம்டுத்தப்படவோ எதுவும் இல்லாததால் அவல நிலை நீடிக்கிறது. நகரத்தினுள் பெரும்பாலான சாலைகள், குடியிருப்பு தெருக்கள் செப்பனிடப்படாமல் குண்டும், குழியுமாகவே கிடக்கிறது. இருபுற கழிவுநீர் வடிகால் வாய்க்கால்கள் எல்லாம் பல தெருக்களில் நாள் கணக்கில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகள் எல்லாம் சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி விட்டதால் ஆங்காங்கே பல இடங்களில் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு சிதறி காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. மேற்கண்டவைகள் எல்லாம் களைந்து சீரமைக்கப்பட்டால், தலைநகர் அந்தஸ்து கொஞ்சம் சிறப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்