ஆடு திருடர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஆடுகளை திருடி செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
வடகாடு:
வெள்ளாடுகள் வளர்ப்பு
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு, மாங்காடு, பனசக்காடு, அனவயல், புள்ளான்விடுதி, கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம், மறமடக்கி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் ஏழை, எளிய அடித்தட்டு மக்கள் முதல் நடுத்தர குடும்பத்தினர் வரை வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை தங்களது வீடுகளில் வளர்த்து வருகின்றனர்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் கிராமப்புற பகுதிகளில் உள்ள காவல் தெய்வங்களுக்கு ஆடுகளை நேர்த்திக்கடனாக நேர்ந்து விடும் வழக்கமும் இப்பகுதிகளில் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மக்களும் ஆடுகளை மொத்தமாக, மந்தையாகவும் வளர்த்து ஓரளவு வருமானம் ஈட்டி வருகின்றனர்.
தொடரும் ஆடுகள் திருட்டு
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே இப்பகுதிகளில் மர்ம நபர்களின் அட்டகாசம் அதிகரித்து, ஆடு வளர்ப்பவர்களை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றது. பொதுமக்கள் அனைவரும் அயர்ந்து உறங்கும் நள்ளிரவு வேளையில் வீட்டு தொழுவம் மற்றும் வீட்டின் தாழ்வாரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள ஆடுகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விடுகின்றனர். மர்ம ஆசாமிகளால் இது வரை நூற்றுக்கணக்கான ஆடுகள் திருட்டு போய் உள்ளது.
இவர்கள் பெரும்பாலும் சாலை ஓரங்களில் உள்ள வீடுகளை பகல் நேரங்களில் நோட்டம் விட்டு பின்னர் நள்ளிரவு வேளையில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் போன்ற வாகனங்களை பயன்படுத்தி ஆடுகள் சத்தம் போடாத படி ஸ்பிரே, மற்றும் மயக்க பொடிகளை தூவி ஆடுகளை லாவகமாக தூக்கி சென்று விடுகின்றனர். காவலுக்கு இருக்கும் நாய்களையும் கொன்று விட்டும் சில நேரங்களில் அவற்றையும் மயங்க செய்து விட்டும், வீடுகளில் இருக்கும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றில் இருக்கும் காற்று, பிளக் வயர்களையும் வெட்டி விட்டு ஆடுகளை தூக்கி சென்று விடுவதாகவும் பொதுமக்கள் வருத்தமுடன் தெரிவித்தனர்.
கோரிக்கை
மேலும் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதி அருகே ஆடு திருடர்களை விரட்டி பிடிக்க சென்ற தனிப்படை சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். அதனைப்போன்ற பெரிய அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்கவும் பொதுமக்களிடையே நிலவி வரும் அச்சத்தை போக்கவும் துரித நடவடிக்களை எடுக்க மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆடுகளை மீட்டு தர வேண்டும்
நெடுவாசல் மேற்கு அரண்மனை தோப்பு பகுதியில் ஆடுகளை பறிகொடுத்த விஜயகுமார் கூறுகையில், தங்களது வாழ்வாதாரத்தை சிறிதேனும் மேம்படுத்தும் நோக்கில் தான் ஆசை ஆசையாக தனது வீட்டில் வளர்த்து வந்த 2 ஆடுகளையும் மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். மேலும் ஆடு திருடும் குற்றவாளிகளை போலீசார் விரைவில் கைது செய்து தங்களது ஆடுகளை மீட்டு தர வேண்டும். ஆடுகளை தூக்கி சென்ற மர்ம ஆசாமிகளை விரைவில் போலீசார் கைது செய்வார்கள் என நம்பி இருப்பதாகவும் கூறினார்.
போலீசார் அலட்சியம்
வடகாடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் கூறுகையில், நள்ளிரவு நேரங்களில் ஆடு திருடர்களிடம் இருந்து ஆடுகளை பாதுகாக்க முடியாமல், பெரும் சிரமப்பட்டு வருவதாகவும், போலீசார் அலட்சியம் காட்டி வருவதாகவும் கூறினார்.
மாங்காடு பகுதியை சேர்ந்த நடராஜன் கூறுகையில், ஆடுகளை மர்ம ஆசாமிகள் தூக்கி சென்று விட்டதால் மனதளவில் பெரும் பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது. இதனால் ஆடு திருடர்களை பிடிக்க போலீசார் துரித நடவடிக்களை எடுக்க வேண்டும் என்று கூறினார்.