வீரர்-வீராங்கனைகளை ஊக்குவிக்க கூடுதல் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படுமா?-வீரர், பயிற்சியாளர்கள் எதிர்பார்ப்பு

வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் கூடுதல் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படுமா? என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2022-12-31 22:26 GMT

மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம்

சேலம் மாநகரின் மைய பகுதியில் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் கடந்த 1966-ம் ஆண்டு பொதுப்பணித்துறையால் அமைக்கப்பட்டது. இந்த மைதானம் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு தடகளம், கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், டென்னிஸ், வில்வித்தை போன்ற விளையாட்டுகளுக்கான வசதிகள் உள்ளன. நீச்சல் குளம், உள் விளையாட்டு அரங்கம் ஆகிய வசதிகளும் உள்ளன.

இந்த மைதானத்துக்கு தினமும் அதிகாலை ஏராளமானவர்கள் வந்து நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் தங்களது விளையாட்டுக்கான பல்வேறு பயிற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்த மைதான வளாகத்தில் இந்திய தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியும் (சாய்) செயல்பட்டு வருகிறது. இதில் பலர் தங்கியிருந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.

மாவட்ட, மாநில போட்டிகள்

பள்ளிக்கல்வித்துறை மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் இங்கு அடிக்கடி நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அரசு சார்பில் இந்த ஒரு விளையாட்டு மைதானம் மட்டுமே உள்ளது. இதனால் சிரமங்களை எதிர்பார்க்காமல் நீண்ட தூரத்தில் இருந்தும் மாணவ, மாணவிகள் உள்பட பலர் இந்த மைதானத்துக்கு வந்து தடகளம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு சார்பில் கூடுதலாக விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டும் என்று வீரர், வீராங்கனைகள் உள்பட பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

பதக்கங்கள் பெற முடியும்

சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார்:-

சேலம் மாவட்டத்தில் அரசு சார்பில் உள்ள மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் தினமும் ஏராளமான விளையாட்டு வீரர்கள் பல்வேறு பயிற்சிகளை எடுத்து வருவதை பார்க்க முடிகிறது. பலர் தொலை தூரங்களில் இருந்து வந்து பயிற்சி மேற்கொள்கிறார்கள். இதனால் சில நேரங்களில் அவர்களால் பள்ளி, கல்லூரி செல்ல தாமதம் ஏற்படுகிறது.

எனவே மேட்டூர், ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட இடங்களில் அரசு சார்பில் நவீன வசதிகளுடன் விளையாட்டு மைதானங்கள் அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் விளையாட்டில் ஆர்வம் உள்ள பல கிராமப்புற மாணவர்கள் அங்கு வந்து பயிற்சி பெற வழிவகுக்கும். மேலும் அவர்களால் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் பெறவும் முடியும்.

தேசிய போட்டிக்கு...

சாய் விளையாட்டு விடுதி முன்னாள் பொறுப்பாளர் ராஜாராம்:-

சேலம் மாவட்டத்தில் கூடுதலாக விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டால் கிராமப்புற மாணவர்கள் உள்பட ஏராளமானவர்கள் அங்கு வந்து பயிற்சி பெறுவார்கள். மேலும் அவர்களுக்கு மூத்த விளையாட்டு வீரர்கள், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் தாமாக முன்வந்து பயிற்சி அளித்தால் பல்வேறு போட்டிகளில் பதக்கம் பெறுவதுடன், தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறவும் வாய்ப்புள்ளது. இதனால் சேலத்துக்கும், தமிழகத்துக்கும் சிறந்த வீரர்-வீராங்கனைகள் கிடைப்பார்கள்.

ஆத்தூரை சேர்ந்த கைப்பந்து பயிற்சியாளர் பரமசிவம்:-

போதிய விளையாட்டு மைதானம் இல்லாததால் பல விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பயிற்சி பெற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அவர்களில் சிலர் கட்டணம் செலுத்தி பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சிகளை எடுக்கின்றனர். ஆத்தூரில் அனைத்து விளையாட்டு வசதிகளுடன் கூடிய மைதானம் ஒன்று அமைத்தால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்கள் தடகளம், கைப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பாக அமையும். இதன்மூலம் அவர்களது வாழ்க்கை மேம்படும்.

ராணுவத்துக்கு பயிற்சி

தாரமங்கலம் பகுதியை சேர்ந்த விளையாட்டு வீரர் பூபாலன்:-

எங்கள் பகுதியில் விளையாட்டு மைதானம் இல்லாததால் என்னை போன்ற பலரால் முறையாக பயிற்சி பெற முடியவில்லை. மேலும் நாங்கள் ஏதாவது பள்ளி அல்லது கல்லூரிகளில் நிர்வாகிகளின் அனுமதி பெற்று அங்குள்ள மைதானங்களில் பயிற்சி பெற வேண்டிய நிலையில் உள்ளோம். எனவே அரசு சார்பில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டால் பயிற்சி எடுப்பதற்கு வசதியாக இருக்கும். மேலும் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வெல்ல எளிதாக இருக்கும். இதுதவிர ராணுவம், போலீஸ் உடற்கல்வி தேர்வுக்கும் பலர் பயிற்சி பெறவும் வாய்ப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

11 தொகுதிகளில் ரூ.3 கோடியில் மினி விளையாட்டு மைதானம்

சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் கூறுகையில், 'பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் 6 அல்லது 7 ஏக்கர் பரப்பளவில் மினி விளையாட்டு மைதானம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்போது மினி விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக இடங்கள் தேர்வு செய்யும் பணி தாசில்தார்கள் மூலம் நடைபெற்று வருகிறது. இடங்கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும். அதைத்தொடர்ந்து மினி விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். இதன்மூலம் அனைத்து தரப்பு வீரர்-வீராங்கனைகள் பயிற்சி பெறவும், பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தவும் நல்ல வாய்ப்பாக அமையும்' என்றார்.

நீச்சல் குளத்தில் பயிற்சி

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நீச்சல் குளம் ஒன்று உள்ளது. இங்கு தற்போது 29 பேருக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வாரத்துக்கு 2 அல்லது 3 முறை தண்ணீரை சுத்தம்படுத்தும் பணி நடைபெறுகிறது. பனிகாலம் என்பதால் நீச்சல் பயிற்சிக்கு அதிகம் பேர் ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. பள்ளி கோடை விடுமுறையொட்டி நீச்சல் குளத்தில் அதிகம் பேர் பயிற்சி பெறுவார்கள். நீச்சல் குளத்தை உரிய முறையில் பராமரிக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றும், சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்