குருசாமிபாளையத்தில் மீண்டும் சங்கு ஒலிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

குருசாமிபாளையத்தில் மீண்டும் சங்கு ஒலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-02-18 18:45 GMT

ராசிபுரம்

விசைத்தறி தொழில்

நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேரூராட்சி குருசாமிபாளையத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நெசவாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இங்கு விசைத்தறி பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

இங்கு விசைத்தறி கூடங்கள், வங்கிகள், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்பட தனியார் பள்ளிகளும் உள்ளன. இங்கு நெசவாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் பயன் பெறத்தக்க வகையில் 56 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கடந்த 1953-ம் ஆண்டு முதல் மின் சங்கு ஒலிப்பான் நடைமுறையில் இருந்து வந்தது.

அண்ணாதுரை மரண செய்தி

இந்த மின்சாரத்தில் இயங்கும் சங்கு ஒலிப்பான் வீடுகளில் கெடிகாரம் இல்லாதவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எளிதில் நேரத்தை அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. மின் சங்கு வைக்கப்பட்ட காலத்தில் இங்கு வசிக்கும் நெசவாளர்கள் நெசவு தொழிலுக்கு பாவு தோய்தலுக்கு புறப்படும் வகையில் அதிகாலை 5 மணிக்கும், மாணவ மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கு வசதியாக காலை 9 மணிக்கும், நெசவு தொழிலாளர்கள், விவசாய கூலி தொழிலாளர்கள் பகல் உணவு இடைவேளைக்காக பகல் 12 மணிக்கும், விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள் பணி முடிந்து வீடு திரும்புவதற்காக பிற்பகல் 2 மணிக்கும், நெசவு தொழிலாளர்கள் பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்புவதற்காக இரவு 8 மணிக்கும், சங்கு ஒலித்து வந்தது. இதைத் தவிர மார்கழி மாதம் முழுவதும் பஜனை குழுவினருக்காக அதிகாலை 4 மணிக்கும் சங்கு ஒலித்து வந்தது.

தொலைக்காட்சி வசதி இல்லாத அந்த காலக்கட்டத்தில் (1953) முக்கிய தலைவர்களின் இறப்பு செய்தியை அறிந்து கொள்வதற்காக அடிக்கடி சங்கு ஒலிக்க செய்து தகவலை அறிந்து கொள்ள உதவியாக இருந்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். எடுத்துக்காட்டாக முதல்-அமைச்சராக இருந்து வந்த அண்ணாதுரை மரணம் அடைந்த செய்தியை அறிய உதவியாக இருந்ததாக கூறினர்.

மீண்டும் சங்கு ஒலிக்குமா?

பல்வேறு வகைகளில் மின் சங்கு ஒலிப்பான் மூலம் சங்கு ஒலித்து வந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு வாக்கில் மின் சங்கு ஒலிப்பான் மூலம் சங்கு ஒலிக்க செய்யவில்லை. இந்த நிலையில் பெண் கவுன்சிலர் வெண்ணிலா தேவராஜன் எடுத்த முயற்சியின் காரணமாக பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கடந்த 2016-ல் பேரூராட்சி அலுவலக கட்டிடத்தின் மேல் தளத்தில் மின் சங்கு ஒலிப்பான் கருவி வைக்கப்பட்டு சங்கு ஒலித்து வந்தது.

இந்த நிலையில் சங்கு ஒலிக்கும் நேரங்களில் அலுவலக கட்டிடத்தில் அதிர்வு ஏற்பட்டதால் மின் சங்கு ஒலிப்பது நிறுத்தப்பட்டது. எனவே கடந்த சில ஆண்டுகளாக மின் சங்கு ஒலிப்பதில்லை. இதனால் பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் கால நேரத்தை அறிந்து கொள்ள முடியாமல் போனது. எனவே மீண்டும் மின் சங்கு ஒலிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, அனைவரும் பயன் அடையச் செய்ய வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

விரைவில் ஏற்பாடு

இதுகுறித்து பேரூராட்சித் தலைவர் சுப்பிரமணியம் கூறியதாவது:-

பிள்ளாநல்லூர் பேரூராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்பட அனைத்து வசதிகளும் தி.மு.க. ஆட்சியில் செய்து தரப்பட்டு வருகிறது. பேரூராட்சி அலுவலக கட்டிடத்தின் மீது வைக்கப்பட்ட மின் சங்கு ஒலிப்பான் இயங்கும்போது கட்டிடத்தில் அதிர்வு ஏற்படுவதாக கூறி சங்கு ஒலிப்பதை நிறுத்தி விட்டனர். இருப்பினும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நெசவாளர்கள், மாணவ, மாணவிகள், விவசாயிகள் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் உள்பட அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் சந்தை மைதானத்தில் மின் சங்கு ஒலிப்பான் விரைவில் அமைத்து தரப்படும். அதற்கான நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் வருகிறது.

தீர்மானம் கொண்டு வந்தேன்

முன்னாள் பெண் கவுன்சிலர் வெண்ணிலா தேவராஜன்:-

மின் சங்கு ஒலிப்பான் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. கடந்த 2006-ம் ஆண்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டபோது மின் சங்கு ஒலிப்பான் அகற்றப்பட்டது. நான் கவுன்சிலராக இருந்த 2011-ம் ஆண்டு மின் சங்கு ஒலிப்பான் வைக்க வேண்டும் என்று பேரூராட்சியில் தீர்மானம் கொண்டு வந்தேன். அது நிறைவேற்றப்பட்டு 2016-ம் ஆண்டு முதல் மின் சங்கு ஒலிப்பான் செயல்பட்டு வந்தது.

ஆனால் கட்டிடம் அதிர்கிறது என்று கூற 2 மாதத்தில் சங்கு ஒலிப்பதை நிறுத்திவிட்டனர். அதில் இருந்து இது வரை சங்கு ஒலிப்பதில்லை. தற்போது பேரூராட்சி அலுவலக வளாகத்தில் புதிதாக இரும்பு ஸ்டேண்டு அமைத்து அதன் மீது சங்கு ஒலிப்பானை வைத்து சங்கு ஒலிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள், பால் கறப்போர், தொழிலாளர்கள், மாணவர்கள் பயன் பெறும் வகையில் மின் சங்கு ஒலிப்பான் வைத்து சங்கு ஒலிக்க செய்ய வேண்டும்.

பஜனைகுழுவினர் பயன் அடைவர்

பேரூராட்சி தி.மு.க. துணை செயலாளர் தியாகராஜன்:- கடந்த சில ஆண்டுகளாக மின் சங்கு ஒலிப்பதில்லை. மீண்டும் சங்கு ஒலிக்க செய்தால் பேரூராட்சியை சுற்றி உள்ள நெசவு மற்றும் ஆலைகள் நிறைந்த கிராமங்கள், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பயன் அளிக்கும். முன்பு சங்கு ஒலித்தபோது தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த நேரம் அறிந்து கொள்ள முடிந்தது. மார்கழி மாத பஜனை குழுவினர் பயன் அடைந்தனர்.

தேர்தல் நேரங்களில் சங்கு ஒலித்தால் வாக்கு அளிக்கும் நேரம் முடிந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. அதேபோல் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் உணவு- வேளை நேரத்தை அறிந்து கொள்ள முடிந்தது. சங்கொலியின் அதிர்வால் உடல் ஒருவிதமான பாசிடிவ் எனர்ஜியை பெற முடியும். பேரூராட்சி நிர்வாகம் சங்கு ஒலிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் பொதுமக்கள் பயன்பெறத்தக்க வகையில் விரைவில் மின் சங்கு ஒலிப்பான் நடைமுறைக்கு வரும் என்று கருதுகிறேன்.

உதவியாக இருந்தது

விசைத்தறியாளர் பன்னீர்செல்வம்:-

மின் சங்கு கடந்த சில ஆண்டுகளாக செயல்படவில்லை. காலையில் மாணவர்கள் படிப்பதற்காக எழுந்திருந்து படிக்க சங்கு பயன்பட்டது. உடற் பயிற்சி செய்வோர், பெண்கள் உழவர் சந்தை, தினசரி மார்க்கெட்டுக்கு போவதற்கும், நெசவாளர்கள் பாவு தோய்தலுக்கு செல்வதற்கும் மின் சங்கு ஒலித்தது பெரிதும் உதவியாக இருந்தது. எனவே அனைவரும் பயன் பெறும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் மின் சங்கு அமைத்து அதை ஒலிக்க செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்