திறந்தவெளியில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
கும்பகோணம் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையில் திறந்தவெளியில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.;
கும்பகோணம்:
ஆன்மிக தலங்கள்
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் கும்பகோணம் மாநகரமானது காவிரி, அரசலாறு என்ற 2 ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் நிறைய உள்ளன. ஆன்மிக தலமாக விளங்கும் கும்பகோணத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் ரெயில்களில் வந்தாலும், அவர்களின் அனைத்து பகுதிகளுக்கும் ரெயில்களில் செல்ல முடிவதில்லை.
பஸ் நிலையங்கள்
பஸ் பயணத்தை தான் நாடி செல்கின்றனர். இதனால் அவர்களின் வசதிக்காக மாநகர பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் என 2 பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பஸ் நிலையங்கள் மூலமாக கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும், வெளிமாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையங்கள் அருகில் ஏராளமான வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளன.
திறந்த வெளியில் மதுகுடிக்கின்றனர்
ரெயில் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் 2 டாஸ்மாக் கடைகளும், காமராஜர் சாலை மற்றும் சர்ச் சாலையில் 2 டாஸ்மாக் கடைகளும் இயங்கி வருகின்றன. இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுவாங்கி கொண்டு மதுப்பிரியர்கள் சிலர் சாலையில் நின்று திறந்த வெளியில் மதுக்குடிக்கின்றனர். இரவு 12 மணி வரை இந்த நிலை நீடிக்கிறது.
மதுவைகுடித்து விட்டு பாட்டில்கள் மற்றும் தின்பண்டங்கள் இருந்த கழிவுகளையே அங்கேயே போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் காலி மதுபான பாட்டில்களும், பிளாஸ்டிக் டம்ளர்களும் அதிக அளவில் கிடக்கின்றன.
மாணவிகள் அச்சம்
காலை நேரத்தில் பாட்டில்களை சேகரிக்க வருபவர்கள் பாட்டில்கள், வாட்டர் பாட்டில்களை எடுத்துச்சென்று விடுகின்றனர். மீதமுள்ளவற்றை அப்படியே போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இதை துப்புரவு பணியாளர்கள் தான் சுத்தம் செய்யும் நிலை ஏற்படுகிறது. இந்த வழியாக தான் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவிகள் சென்று வருகின்றனர். சாலையோரத்தில் நின்று கொண்டு மதுப்பிரியர்கள் மதுகுடிப்பதால் மாணவிகள் மற்றும் பெண் பயணிகளும் அச்சதுடன் சென்று வருகின்றனர்.
சில நேரங்களில் மதுப்பிரியர்கள் குடித்து விட்டு தகராறில் ஈடுபடுவதுடன், ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொள்கின்றனர்.
இதன் காரணமாக பஸ் நிலையத்திற்குள் செல்லும் பயணிகளும், பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் பயணிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மதுப்பிரியர்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது
மேலும் நாளுக்குள் நாள் இங்கு மதுப்பிரியர்களின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டு தான் வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. புதிய பஸ் நிலையத்தின் முகப்பு பகுதியில் கடைகளின் முன்பும் இதே நிலை தான் நீடிக்கிறது. தொடர்ந்து மதுப்பிரியர்களின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டே செல்வதால் பஸ் நிலையத்திற்குள் பொதுமக்கள் செல்லவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மதுப்பிரியர்கள் சாலையில் நின்று மதுகுடிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.