அகலமான புதிய பாலம் கட்டப்படுமா?

விழல்கோட்டகத்தில் சேதமடைந்துள்ள குறுகிய நடைபாலத்தை அகற்றிவிட்டு அகலமான புதிய பாலம் கட்டப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.;

Update: 2023-05-06 18:45 GMT

கூத்தாநல்லூர்:

விழல்கோட்டகத்தில் சேதமடைந்துள்ள குறுகிய நடைபாலத்தை அகற்றிவிட்டு அகலமான புதிய பாலம் கட்டப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நடைபாலம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள விழல்கோட்டகம் கிராமத்தில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக, சுமார் 40 வருடங்களுக்கு முன்பு, கோரையாற்றின் குறுக்கே சிறிய அளவில் ஆன நடைபாலம் அமைக்கப்பட்டது. சிமெண்டு தலங்கள் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் கம்பிகள் மற்றும் இரும்பு குழாய்கள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தை, விழல்கோட்டகம், வெள்ளக்குடி, மண்ணுக்குமுண்டான், கோரையாறு, சித்தாம்பூர், அரசூர், வாழச்சேரி, கற்கோவில், சர்க்ககரை, கிளியனூர், தேவங்குடி, அதங்குடி, பொதக்குடி, மற்றும் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், திருவாரூர், கூத்தாநல்லூர், கொரடாச்சேரி, மன்னார்குடி போன்ற ஊர்களில் படிக்கக்கூடிய பள்ளி மாணவ மாணவிகள் இந்த பாலத்தை கடந்து தான் சென்று வருகின்றனர்.

சேதமடைந்துள்ளது

இந்த நிலையில், இந்த பாலம் கடந்த 7ஆண்டு களுக்கும் மேலாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக, பாலத்தின் முகப்பில் உள்ள தடுப்பு சுவர் பகுதியில் உடைந்து மண் சரிவு ஏற்பட்டது. இதனால், பாலம் பிடிப்பு தன்மை, பலம் இழந்து காணப்படுகிறது. இதன்மூலம் ஆற்றில் அதிகமாக தண்ணீர் வரும் போது பாலம் ஆற்றில் அடித்து செல்லும் வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், பாலத்தின் தடுப்பு கம்பிகள் இடை இடையே இல்லாமல் உள்ளதால் இரவு நேரங்களில் பாலத்தை கடந்து சென்று வரக்கூடியவர்கள் சிலர் ஆற்றுக்குள் விழுந்து காயம் அடைகின்றனர்.மேலும், பள்ளி மாணவர்கள், வயதானவர்கள் இந்த பாலத்தை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர்.

அகலமான பாலம்

இந்த பாலம் அமைந்துள்ள இடத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. பாலம் குறுகலாக உள்ளத்தால் பல ஆண்டுகளாக வாகனங்களும் சென்று வர முடியாமல் உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த குறுகலான நடைபாலத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் அகலமான புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்