பாசன வாய்க்கால் குறுக்கே புதிய பாலம் கட்டப்படுமா?

கொள்ளிடம் அருகே மாதானம் தென்பாதி கிராமத்தில் பாசன வாய்க்கால் குறுக்கே புதிய பாலம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2023-01-29 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே மாதானம் தென்பாதி கிராமத்தில் பாசன வாய்க்கால் குறுக்கே புதிய பாலம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மாதானம் தென்பாதி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானம் ஊராட்சி தென்பாதி கிராமத்தில் நாடார் தெரு உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த தெருவுக்கு செல்ல வேண்டுமானால் மாதானம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சாலையோரம் உள்ள பாசன வாய்க்காலை கடந்து தான் செல்ல வேண்டும்.

பிரதான புது மண்ணி ஆறு பாசன வாய்க்காலில் இருந்து தில்லைவிடங்கன் வாய்க்கால் மற்றும் மாதானம் பாசன வாய்க்கால் என 2 வாய்க்கால்கள் பிரிந்து செல்லும் இடத்தில் நாடார் தெருவுக்கு செல்லும் வகையில் வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டப்பட்டிருந்தது.

குறுகலான பாலம்

மிகவும் குறுகலான இந்த பாலம் வழியாக கிராம மக்கள் சிரமத்துடன் சென்று வந்தனர். இந்த தெருவுக்கு செல்லும் பிரதான பாலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அந்த பாலத்தின் ஒரு பகுதி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடைந்து வாய்க்காலில் விழுந்தது. இதனால் இந்த தெருவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வாய்க்காலில் இறங்கியும், வாய்க்காலில் ஷட்டர் மதகின் மேல் உள்ள சிறு பலகையை கடந்தும் சென்று வருகின்றனர்.

இரவு நேரங்களில் அந்த பகுதி வழியாக செல்ல மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். உடைந்த பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், 'வாய்க்காலில் ஏற்கனவே இருந்த குறுகிய பாலமும் உடைந்து விட்டது. இதனால் தெருவுக்கு செல்வதற்கு சிரமமாக உள்ளது. சிறுவர்கள் தினமும் சிரமத்துடன் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். தெருவுக்கு செல்லும் ஒற்றையடி பாதையை தாமதமின்றி அகலப்படுத்தி தார்ச்சாலையாக மேம்படுத்தவும், வாய்க்காலின் குறுக்கே புதிய பாலம் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்