புதிய பாலம் கட்டப்படுமா?
கூடலூரில் தற்காலிக பாலம் சேதம் அடைந்து வருவதால், மங்குழி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.;
கூடலூர்,
கூடலூரில் தற்காலிக பாலம் சேதம் அடைந்து வருவதால், மங்குழி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
உடைந்து விழுந்தது
கூடலூர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் தொடர் கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த சமயத்தில் மங்குழி ஆற்று வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் அதன் குறுக்கே கட்டப்பட்டு இருந்த பழமையான சிமெண்ட் பாலம் உடைந்து ஆற்றில் விழுந்தது.
அப்போது பாலத்தில் நின்றிருந்த பொதுமக்கள் பலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தநிலையில் பாலம் உடைந்ததால் மங்குழி பகுதி மக்கள் கூடலூர் நகருக்கு வர முடியாத வகையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து சில கி.மீட்டர் தூரம் பயணம் செய்து கூடலூர் நகருக்குள் வர வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
புதிய பாலம்
இதைத்தொடர்ந்து பல்வேறு கோரிக்கைக்கு பிறகு ரூ.2 லட்சம் செலவில் நகராட்சி சார்பில் ஆற்றின் குறுக்கே தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டது.
இருப்பினும் சிமெண்ட் பாலம் கட்டாததால் போக்குவரத்து நடைபெறுவது இல்லை. இதற்கிடையே தற்காலிக பாலமும் நாளுக்கு நாள் சேதம் அடைந்து வருகிறது. இதனால் பாலம் விரைவாக கட்ட வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, முக்கிய சாலையின் குறுக்கே செல்லும் ஆற்று வாய்க்கால் மீது சிமெண்ட் பாலம் கட்டாததால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலமும் சேதம் அடைந்து வருகிறது. எனவே, புதிய பாலம் கட்டுமான பணியை அதிகாரிகள் விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.