குட்டிகளுடன் காட்டுயானைகள் நடமாட்டம்

கூடலூர்-முதுமலை சாலையோரத்தில் குட்டிகளுடன் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-10-25 20:30 GMT

கூடலூர்-முதுமலை சாலையோரத்தில் குட்டிகளுடன் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகமானது சுமார் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு காட்டு யானை, புலி, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேலும் யானை சவாரி, வாகன சவாரி நடைபெறுகிறது.

இதற்காக முதுமலைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதோடு கேரளா, கர்நாடகாவில் இருந்து முதுமலை வழியாக கூடலூர், ஊட்டிக்கும் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். அப்போது சாலையோரம் முகாமிடும் வனவிலங்குகளை ரசித்து செல்கிறார்கள்.

காட்டுயானைகள் நடமாட்டம்

இந்த நிலையில் கூடலூர், முதுமலையில் பெய்த தொடர் மழையால், சாலையோர வனப்பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளது. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில் கூடலூர்-முதுமலை சாலையோரம் குட்டிகளுடன் காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. அவற்றை காணும் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் இருந்து இறங்கி புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மேலும் கூச்சலிட்டு அவற்றை அச்சுறுத்துகின்றனர். இதனால் அவை மிரண்டு அவர்களை தாக்கும் அபாயம் உள்ளது.

தொந்தரவு செய்யக்கூடாது

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, முதுமலை சாலையில் வாகனத்தில் செல்லும் போது வனவிலங்குகளை கண்டு ரசிப்பதில் தவறு இல்லை. ஆனால் வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது. காட்டுயானைகள் எதிர்பாராத வகையில் திடீரென தாக்கும் குணம் உடையவை. இதை வெளிமாநில சுற்றுலா பயணிகள் அறிவது இல்லை. எனவே கவனமுடன் இருக்க வேண்டும். அவற்ைற தொந்தரவு செய்யக்கூடாது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்