வனப்பகுதியில் வீசிய கேரட்டுகளை தின்ற காட்டு யானைகள்
மசினகுடி அருகே வனப்பகுதியில் வீசிய கேரட்டுகளை காட்டு யானைகள் தின்றன. இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.;
கூடலூர்
மசினகுடி அருகே வனப்பகுதியில் வீசிய கேரட்டுகளை காட்டு யானைகள் தின்றன. இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கேரட் மூட்டைகள்
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட (வெளி மண்டலம்) பகுதியான மசினகுடி, சிங்காரா, சீகூர் வனப்பகுதிகளில் காட்டு யானைகள், கரடிகள், புலிகள், செந்நாய்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. முதுமலை தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி, கல்லட்டி வழியாக ஊட்டிக்கு சாலை செல்கிறது.
இதனால் மாலை அல்லது இரவில் காட்டு யானைகள் சாலையில் வந்து நிற்பது வாடிக்கை ஆகும். இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மசினகுடியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் சீகூர் பாலம் அடியில் அடையாளம் தெரியாத நபர்கள் 4 கேரட் மூட்டைகளை வீசி சென்றனர்.
காட்டு யானைகள்
தொடர்ந்து அப்பகுதிக்கு 2 காட்டு யானைகள் வந்து கேரட்டுகளை விரும்பி தின்றது. இதை கண்ட வாகன ஓட்டிகள் இந்த காட்சியை செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர். தொடர்ந்து அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் கேரட்டுகளை காட்டு யானைகள் முழுமையாக தின்று விட்டு, அப்பகுதியில் நீண்ட நேரம் முகாமிட்டு இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சிங்காரா வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே கேரட்டுகளை தின்ற ஆவலில் காட்டு யானைகள் தினமும் அப்பகுதிக்கு வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, கேரட் மூட்டைகளை வீசிய நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.