கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்

தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்திற்குள் காட்டு யானைகள் புகுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.;

Update: 2022-06-22 15:03 GMT

தேன்கனிக்கோட்டை

காட்டு யானைகள்

தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காப்புக்காட்டில் 3 காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தன. இந்த காட்டு யானைகள் ஜவளகிரி அருகே உள்ள அகல கோட்டை கிராமத்திற்குள் இரவு நேரங்களில் புகுந்து விவசாய பயிர்களை மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்து வந்தன.

இந்த நிலையில் நொகனூர் வனப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலை அகலகோட்டை கிராமத்திற்குள் 3 காட்டு யானைகள் புகுந்தன. இந்த யானைகள் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நர்சரி பண்ணைக்குள் புகுந்து பல லட்ச ரூபாய் மதிப்பிலான செடிகளை சேதப்படுத்தின. பின்னர் அந்த யானைகள் கிராமத்திற்குள் சுற்றித்திரிந்தன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

இந்த காட்டு யானைகள் ஜவளகிரி சாலையை அவ்வப்போது கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று காட்டு யானைகளை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.

காட்டு யானைகள் கிராமத்திற்குள் புகுவதை தடுக்கவும், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்