தேயிலை தோட்டத்தில் காட்டுயானை முகாம்
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையோர தேயிலை தோட்டத்தில் காட்டுயானை முகாமிட்டு உள்ளது. அது அடிக்கடி சாலையை கடப்பதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.;
கோத்தகிரி
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையோர தேயிலை தோட்டத்தில் காட்டுயானை முகாமிட்டு உள்ளது. அது அடிக்கடி சாலையை கடப்பதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
பலாப்பழ சீசன்
கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் உள்ள பலா மரங்களில் கடந்த மே மாதத்தில் பலாப்பழ சீசன் தொடங்கியது. சீசன் இன்னும் முடிவடையாமல் உள்ளதால் பலா மரங்களில் பழங்கள் பழுத்து குலுங்கி வருகின்றன. இந்த பழங்களை தின்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டுயானைகள் வந்து முகாமிட்டு உள்ளன. அவை அந்த பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களிலும் முகாமிட்டு வருகின்றன. மேலும் அவ்வப்போது கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உலா வருகின்றன. இதனால் அந்த சாலையில் அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து பாதிப்பு
இந்தநிலையில் நேற்று காலை 9 மணியளவில் தட்டப்பள்ளம் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள ஆண் காட்டு யானை ஒன்று மெதுவாக சாலைக்கு வந்து கடந்து சென்றது. இதனால் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோன்று கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் ஆங்காங்கே பல இடங்களில் அந்த காட்டுயானை சாலையில் நின்று கொண்டு செடி, கொடிகளை தின்றவாறு இருப்பதால் தொடர்ந்து போக்குவரத்து தடைபட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே காட்டுயானை சாலைக்கு வராத வகையில் அகழி வெட்டவோ அல்லது தடுப்புகள் அமைக்கவோ வனத்துறையினர் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.