கொடைக்கானல் பஸ் நிலையத்தில் காயத்துடன் உலா வந்த காட்டெருமை

கொடைக்கானல் பஸ் நிலையத்தில் காலில் காயத்துடன் காட்டெருமை உலா வந்தது.

Update: 2023-01-27 16:57 GMT

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் சமீபகாலமாக காட்டெருமைகள் நகர் பகுதிக்குள் உலா வருவதும், பொதுமக்களையும், வளர்ப்பு பிராணிகளையும், தாக்குவதும் அச்சுறுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை பஸ் நிலையத்தில் காலில் காயத்துடன் காட்டெருமை ஒன்று உலா வந்தது. இதை பார்த்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அச்சமடைந்தனர்.

அந்த காட்டெருமை பஸ்நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதியின் முன்பகுதியில் இருந்த செயற்கை நீருற்றில் தண்ணீர் அருந்தியது. இந்தக்காட்சியினை கண்டதும் ஆபத்தை உணராமல் சிலர் அதன் அருகில் சென்று செல்பி மற்றும் புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டினர்.

தகவலறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். காலில் காயம் அடைந்த காட்டெருமைக்கு வனத்துறையினர் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்