வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் கடமான் வேட்டையாடிய 2 பேர் கைது- 4 போ் தப்பி ஓட்டம்

வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் கடமான் வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். 4 பேர் தப்பி ஓடினர்.;

Update:2023-04-04 00:15 IST

அந்தியூர்

வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் கடமான் வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். 4 பேர் தப்பி ஓடினர்.

ரோந்து

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் அந்தியூர் வனச்சரகர் உத்திரசாமி தலைமையில் வனவர்கள் சக்திவேல், திருமூர்த்தி, வனக்காப்பாளர் சதீஸ்குமார் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

அப்போது வனத்துறையினரை கண்டதும் அங்குள்ள புதர் மறைவில் 2 பேர் மறைந்தனர். இதை கண்டதும் வனத்துறையினர் விரைந்து சென்று அந்த 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

கடமான் வேட்டை

விசாரணையில், 'அவர்கள் அந்தியூர் அருகே உள்ள கோவிலூரை சேர்ந்த முருகேசன் (வயது 40), எண்ணமங்கலத்தை சேர்ந்த பிரகாஷ் (44) என்பதும், அவர்கள் 2 பேரும், தங்களுடைய நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த கடமானை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியதும்,' தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில், 'அவர்கள் 6 பேரும் வேட்டையாடிய கடமானை துண்டுகளாக வெட்டி அதை 4 சாக்கு மூட்டைகளில் கட்டி வனப்பகுதியை விட்டு வௌியேறியபோது, அவர்களில் 2 பேர் வனத்துறையினரிடம் சிக்கியதும், மற்ற 4 பேர் தப்பியதும்,' தெரியவந்தது.

கைது

இதைத்தொடர்ந்து முருகேசன், பிரகாஷ் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து கடமான் தோல் மற்றும் இறைச்சியை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் துப்பாக்கியுடன் தப்பி சென்ற கோவிலூரை சேர்ந்த பிரபு, சடையன், முருகசேன், விளாங்குட்டையை சேர்ந்த ராசு ஆகிய 4 பேரையும் வனத்துறையினர் தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்