வாலிபர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக மனைவி புகார்
வாலிபர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக மனைவி புகார் தெரிவித்தார்.;
திண்டுக்கல் மேற்கு மாநகர பா.ஜ.க. தலைவர் பால்ராஜ். இவர் திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு சொந்தமான குடோனில் நிறுத்தி இருந்த ஒரு கார், 7 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பேகம்பூரை சேர்ந்த சிக்கந்தர் என்பவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் சிக்கந்தரின் மனைவி ஹாஜிராபானு, குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது கணவரின் முதுகில் கூன் இருப்பதால் நல்ல வேலைக்கு கூட செல்ல முடியவில்லை. மாற்றுத்திறனாளியான அவர் கறிக்கடையில் வேலை செய்கிறார். கடந்த 25-ந்தேதி அதிகாலையில் போலீசார் எங்களுடைய வீட்டுக்கு வந்து எனது கணவரை அழைத்து சென்றனர். மேலும் எனது கணவர் மீது பொய் வழக்கு பதிந்து கைது செய்து இருக்கின்றனர். எனவே எனது கணவரின் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனது கணவரை அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.