தமிழகத்தில் பரவலாக மழை: கள்ளக்குறிச்சியில் கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்தது
கள்ளக்குறிச்சியில் வெளுத்து வாங்கிய மழையால், ஓடை கரை உடைந்து கிராமத்துக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்தது.
கள்ளக்குறிச்சி,
தலைநகர் சென்னையை போல தமிழகத்தில் பல இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. கடலூரில் நேற்று காலை சாரல் மழை பெய்தது. ஆனால் அதன்பிறகு மழை இல்லை. ஆனால் விருத்தாச்சலம், நெல்லிக்குப்பம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக கள்ளக்குறிச்சி மணிமுக்தாறு அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
வெள்ளத்தில் சிக்கியவாலிபர்
இதற்கிடையே வடபூண்டி கிராமத்தை சேர்ந்த பரத் (வயது 20) என்பவர் கண்டாச்சிபுரம் அய்யனார் கோவில் அருகே மணிமுக்தாற்றை கடக்க முயன்றார்.
அப்போது வெள்ளத்தில் அவர் சிக்கினார். அவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
ஏரி உடைப்பு
கள்ளக்குறிச்சி புத்தந்தூர் வழியாக ஆலத்தூர் ஏரிக்கு செல்லும் ஓடையில் அதிகப்படியான தண்ணீர் வரத்து இருந்ததால், ஓடையின் கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
அங்கிருந்து ஆர்ப்பரித்து சென்ற வெள்ள நீர் கிராமத்துக்குள் புகுந்து அங்கு உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது. பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் பெரும்பாதிப்புக்கு ஆளாக நேரிட்டது.
அதேபோல் அந்த பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த 30 ஏக்கர் நெற்பயிரையும் மழை வெள்ளம் மூழ்கடித்தது.
வேலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
வேலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை மழை பெய்ய தொடங்கியது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் குடைபிடித்தபடி சென்றனர். தொடர் மழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று பிற்பகல் 3 மணிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலும் அரக்கோணம், நெமிலி தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. தஞ்சையில் நேற்று மதியம் 1 மணிக்கு பலத்த மழை பெய்தது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நேற்று காலை கனமழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதால் நுரை பொங்கி தண்ணீர் சென்றது.