மாவட்டத்தில் பரவலாக மழை:அதிகபட்சமாக வானமாதேவியில் 62 மி.மீ. பதிவு
மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வானமாதேவியில் 62 மி.மீ. மழை பதிவானது.;
மழை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் மாலையில் மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இருப்பினும் இடி, மின்னலுடன் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் ஆங்காங்கே சாய்ந்து விழுந்தன. அதன்பிறகு மழை இல்லை.
மைதானத்தில் தண்ணீர் தேங்கியது
இதையடுத்து இரவு 12.45 மணி அளவில் மீண்டும் மழை பெய்தது. கன மழையாகவும், மிதமான மழையும் விட்டு, விட்டு அதிகாலை வரை பெய்தது. நேற்று காலை முதல் மாலை வரை மழை இல்லை. இருந்த போதிலும் இந்த மழைக்கு அண்ணா விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள முடியாமல் வீரர்கள், வீராங்கனைகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டும் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
கிரிக்கெட் மைதானம் அருகில் நடைபாதையோரம் நின்ற மரம் சாய்ந்து விழுந்தது. பெரிய மரத்தின் கிளையும் முறிந்து நடைபாதையில் விழுந்து கிடந்தது. இதனால் நடைபயிற்சி செல்வோர் சிரமத்துடன் அதை கடந்து சென்றனர். பிறகு விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள், நடைபயிற்சி செல்வோர் ஈடுபட்டனர்.
மழை அளவு
இதேபோல் சிதம்பரம், அண்ணாமலைநகர், வானமாதேவி, பண்ருட்டி, தொழுதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணி வரை முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 62 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. மாவட்டத்தில் சராசரியாக 12.77 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் மற்ற இடங்களில் பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பெலாந்துறை- 61, கடலூர் - 48.9, குடிதாங்கி - 41.25, கலெக்டர் அலுவலகம்- 35.4, பண்ருட்டி -35, சிதம்பரம் -23, லக்கூர் - 7, அண்ணாமலைநகர் -3.6, தொழுதூர் -2.