மாவட்டத்தில் பரவலாக மழை

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.;

Update: 2022-08-29 20:23 GMT

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஆலங்குளம்

ஆலங்குளம், சுண்டங்குளம், லட்சுமிபுரம், சங்கரமூர்த்திபட்டி, கல்லமநாயக்கர்பட்டி கீழராஜகுலராமன், காளவாசல், வலையபட்டி, மேலாண்மறைநாடு, கீழாண்மறைநாடு, ராசாப்பட்டி, அண்ணாநகர், கொங்கன்குளம் ஆகிய கிராங்களில் நேற்று பரவலாக மழை பெய்து உள்ளது.

இந்த பகுதியில் தற்போது விவசாயிகள் மக்காச்சோளம், பருத்தி ஆகிய விதைகள் ஊன்றி உள்ளனர். இந்த மழை இந்த பயிர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கூறினர்.

தாயில்பட்டி-சாத்தூர்

தாயில்பட்டி, வெற்றிலையூரணி, கோதை நாச்சியார்புரம், விஜயரெங்கபுரம், ஏழாயிரம் பண்ணை, சேர்வைக்காரன்பட்டி, சங்கர பாண்டிபுரம், சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் சாரல் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் பட்டாசு ஆலையில் பட்டாசு உற்பத்தி நிறுத்தப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக பட்டாசு தொழிலாளர்கள் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் சத்திரத்தில் இருந்து குகன் பாறை செல்லும் ஓடையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாரல் மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 2-வது நாளாக மழை பெய்தது. 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை, காந்திநகர் ராமசாமிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக தங்கசாலை தெரு, எஸ்.பி.கே. பள்ளி சாலை, விருதுநகர் ரோடு, பூக்கடை பஜார் உள்ளிட்ட பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீரோடு கலந்து சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

சிறிய மழை பெய்தால் கூட சாலைகளில் சாக்கடை நீர் தேங்குவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

விருதுநகர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்