நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை
நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. பிற்பகல் 2.30 மணி அளவில் லேசான மழை பெய்ய தொடங்கியது.
தொடர்ந்து இரவு வரை அவ்வப்போது லேசாக மழை பெய்து கொண்டே இருந்தது. நெல்லை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதி ேசறும், சகதியுமாக காட்சி அளித்தது. இதேபோல் மாவட்டத்தில் நாங்குநேரி, ராதாபுரம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. இதையொட்டி பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 954 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு 1,424 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மணிமுத்தாறு அருவி
இதேபோல் அம்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதல் அம்பை சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 2 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதேபோல் மணிமுத்தாறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருந்ததால் நேற்று 2-வது நாளாகவும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
மழை அளவு
நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- அம்பை -11, மணிமுத்தாறு -5, நாங்குநேரி -7, ராதாபுரம் 4.