கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை: மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. சின்னதாராபுரம் பகுதியில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2023-05-04 18:28 GMT

பரவலாக மழை

கோடை காலத்தில் கத்தரி வெயில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ந்தேதி தொடங்கி, 28-ந்தேதியுடன் நிறைவு பெறும். அந்த வகையில் இந்த காலக்கட்டத்தில் வாட்டி வதைக்கக்கூடிய கத்தரி வெயில் நேற்று தொடங்கியது. கரூர் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் அடித்தது. இந்தநிலையில் கரூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் நேற்று காலை வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.

பின்னர் நேற்று மாலை 4.30 மணியளவில் கருமேகங்கள் திரண்டு பரவலாக மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது கரூர் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்தது.

பின்னர் இரவு 7.15 மணியளவில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. மேலும் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மரம் விழுந்தது

க.பரமத்தி, தென்னிலை, சின்னதாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 4 மணி முதல் ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கியது. சின்னதாராபுரம் அருகே காட்சினாம்பட்டி பிரிவு என்னும் இடத்தில் மழையுடன் காற்று வேகமாக வீசியதால் கரூர்-தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பெரிய மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சின்னதாராபுரம் போலீசார், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ெசன்று அந்த மரத்தைவெட்டி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில் எல்லமேட்டில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று மரம் விழுந்த இடத்திற்கு அருகே வந்தபோது நிலை தடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து இரவு முழுவதும் மழை பெய்து கொண்டு இருந்தது.

நொய்யல்

நொய்யல், மரவாபாளையம், புன்னம் சத்திரம், புன்னம், மூலிமங்கலம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், குளத்துப்பாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூர், திருக்காடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

இதனால் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள், கூலி வேலைக்கு சென்று திரும்பியவர்கள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இந்த மழையால் வறண்ட கிணறுகளில் ஊற்றெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி-வேலாயுதம்பாளையம்

அரவக்குறிச்சி, ஈசநத்தம், பள்ளப்பட்டி, தடாகோவில், மலைக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணியில் இருந்து மாலை 6 மணி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் கால்நடைகளுக்கு தேவையான தீவனப் புற்கள் துளிர்விட ஆரம்பித்துள்ளது.

வேலாயுதம்பாளையம், காகிதபுரம், புகழூர், நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் பள்ளமான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

Tags:    

மேலும் செய்திகள்