சுகாதார மைய கட்டிடத்தின் உண்மை தன்மையை மறைக்க முயற்சிப்பது ஏன்?- மதுரை ஐகோர்ட்டு கேள்வி

சுகாதார மைய கட்டிடத்தின் உண்மை தன்மையை மறைக்க முயற்சிப்பது ஏன்? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது

Update: 2023-06-27 20:56 GMT


ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் கலந்தர் ஆசிக் அகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள துணை சுகாதார மையத்தில்தான் இந்த பகுதியைச் சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துணை சுகாதார மைய கட்டிடம் கட்டப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதனால் அந்த கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுகிறது. இதனால் இங்கு பணியாற்றுவதற்கு பணியாளர்கள் அச்சப்படுகின்றனர். இதனால் துணை சுகாதார நிலையத்தை பூட்டி வைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த கட்டிடத்தின் அபாயகரமான நிலையை பார்த்த மக்கள், இங்கு சிகிச்சைக்கு வர மறுக்கின்றனர். எனவே ஆர்.எஸ்.மங்கலம் துணை சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர் குற்றச்சாட்டு குறித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மாவட்ட முதன்மை நீதிபதியின் ஆய்வு அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆர்.எஸ்.மங்கலம் சுகாதார மையத்தில் ஒரு பகுதி தடை செய்யப்பட்டது என எழுதப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு செயல்படுகிறது. அதுபோல அங்கு தற்போது சுண்ணாம்பு பூசப்பட்டு உள்ளது. உள்ளே ஜெனரேட்டர் இருக்கிறது என்பது உள்பட பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தன.

பின்னர் நீதிபதிகள், சுகாதார மைய கட்டிடத்தின் உண்மைத்தன்மையை மறைக்க அதிகாரிகள் முயற்சி செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பி, இந்த வழக்கை ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்