இன்றைய இளைஞர்களிடம் விவாகரத்து முடிவு அதிகரித்து இருப்பது ஏன்?

இன்றைய அவசர உலகில் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் இளம் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலும், விட்டு கொடுத்து வாழத் தெரியாமலும், சிறிய விஷயங்களுக்கு எல்லாம் கோபப்பட்டு, சண்டை போட்டுக் கொண்டு விவாகரத்து வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Update: 2023-02-17 19:02 GMT

விவாகரத்து

அதிலும் குறிப்பாக 30 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் இந்த முடிவை எடுக்கின்றனர்.

சாதி, மதம், இனம் என்று வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரும் விவாகரத்தை தேடிச்செல்கின்றனர்.

சகிப்பு தன்மையும், புரிதலும் இல்லாததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

கணவன்-மனைவி இருவருக்கும் விவாகரத்து பெறுவதற்கான சம உரிமை இருந்தாலும், விவாகரத்து கோருவதற்கு சில காரணங்கள் சட்டரீதியாக இருக்கின்றன என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். அதுபற்றிய விவரத்தைக் காண்போம்.

செல்போன்...

மணமேல்குடி வெள்ளூர் சிறுவரை பகுதியை சேர்ந்த ராமசாமி:- இளைஞர்கள் மற்றும் பெண்கள் குறிப்பிட்ட வயதிற்கு மேல் பெற்றோர் சொல் கேட்பதை விரும்பவில்லை. தங்களது துணையை தாங்களே தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள். அவர்கள் சுகபோகமான வாழ்வு மற்றும் வசதிக்கு ஆசைப்பட்டு அறியாத வயதில் திருமணம் செய்து கொள்வதால் விவாகரத்து அதிகரிக்கிறது. மேலும், தகவல் தொழில்நுட்பங்கள் மற்றும் செல்போன் ஆகியவை விவாகரத்துக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. எவ்வளவு நாகரீகம் வளர்ந்தாலும் பெற்றோர் சொல்படி திருமணம் செய்வதுதான் இறுதிவரை வாழ்க்கையை சிறப்பாக கொண்டு செல்ல முடியும்.

புரிதல் இன்மை

விராலிமலையை சேர்ந்த செந்தில்குமார்:- விவாகரத்து முடிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது தம்பதியினரிடையே உள்ள புரிதல் இன்மைதான். இன்றைய சமூகத்தில் வாழக்கூடிய இளைஞர்கள் அனைவரும் சுதந்திரமாக வாழ்கிறார்கள். அந்த வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு பெரும்பாலானோருக்கு கிடைக்காததால் இந்த விவாகரத்து முடிவை எளிதாக எடுத்து விடுகின்றனர். அது மட்டுமின்றி வரதட்சணை, ஆண்மைக்குறைபாடு என எத்தனையோ இருந்தாலும், முக்கியமாக பெண்களின் விருப்பமில்லா திருமணம், வேடிக்கையை விரும்பும் இன்றைய தலைமுறை மற்றும் தமது பொருளாதாரத்தை மிஞ்சிய எதிர்பார்ப்புகள் ஆகியவற்றாலும் இந்த முடிவை பெரும்பாலோனோர் எடுக்கின்றனர். எதுவாக இருந்தாலும் பெற்றோர்கள் நமது பாரம்பரியத்தை தங்களது குழந்தைகளுக்கு தெரிவித்தும் சுய கட்டுப்பாட்டுடன் வாழ்வதற்கு கற்றுக் கொடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சண்டை சச்சரவு

அன்னவாசலை பகுதியை சேர்ந்த தம்பதி மாரியம்மாள்- சின்னத்தம்பி:- கூட்டுக்குடும்பமாக வாழ்பவர்களின் சதவீதம் வெகுவாக குறைந்துவிட்டது. சண்டை, சச்சரவு இல்லாத குடும்பங்களை பார்க்கவே முடியாது. ஆனால் தம்பதிகள் காலையில் சண்டையிட்டுக் கொண்டால் மாலையில் ஒன்று கூடி விட வேண்டும். குடும்பத்தில் மூத்தவர்கள் சொல்லும் ஒன்றிரண்டு விஷயங்களையாவது ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இளைய தலைமுறையினருக்கு வேண்டும். கணவன், மனைவி இருவரும் ஒருவர் மற்றவருக்காக வாழ தொடங்கும்போது வாழ்க்கையின் அர்த்தம் புரியத்தொடங்கும். குழந்தைகளைகளின் எதிர்கால வாழ்க்கை எண்ணியை, மனக்கசப்புகளை உடனுக்குடன் மறந்து, கணவனும், மனைவியும் மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையுடனும் வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

கள்ளத்தொடர்பு

புதுக்கோட்டையை சேர்ந்த அரசு வக்கீல் உஷாராணி:- விவாகரத்து கோருபவர்கள் சொல்லும் முகாந்திரம் சரியாக இருக்கும்பட்சத்தில் வழக்குகள் குடும்ப நல கோர்ட்டுகளில் ஏற்றுக்கொள்ளப்படும். அதிகமாக பெண்கள் தான் விவாகரத்து கோரி வழக்கு தொடருகின்றனர். கணவா் கொடுமைப்படுத்துதல், கணவரின் கள்ளத்தொடர்பு உள்ளிட்ட காரணங்களாலும், அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத செயலை செய்வதாலும் கணவரிடம் இருந்து விவாகரத்து கோருகின்றனர். இனி அவர்களுடன் வாழவே முடியாது என்ற முடிவை எடுத்த பின் தான் கோர்ட்டிற்கு வருகின்றனர். இதேபோல ஆண்கள் தரப்பிலும் தனது மனைவியின் நடவடிக்கைகள் பிடிக்காமல், மனஸ்தாபத்தின் காரணமாகவும் பிரியக்கூடிய முடிவை எடுக்கின்றனர். விவாகரத்து என்பதை கோர்ட்டு உடனடியாக வழங்கி விடாது. சமரச தீர்வு மையம் மூலமும் தீர்வு காண ஏற்பாடு செய்யப்படும். கணவன்-மனைவி இருவரையும் தனி அறையில் அமர வைத்து பேச வைத்தல். அவர்களுக்குள் கருத்தொற்றுமை ஏற்படுத்துதல் என பல வழிகளில் அவர்களை சேர்த்து வைக்க முயற்சிப்பது உண்டு. ஆனால் சிலர் பிடிவாதமாக விவாகரத்து கேட்டு வாங்கி செல்வார்கள். ஆனால் ஒரு சிலர் விவாகரத்து முடிவை கைவிட்டு சேர்ந்துள்ளனர்.

விவாகரத்து பெறுபவர்களில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருந்தால், அந்த குழந்தை தாயின் பராமரிப்பில் வளரும். அந்த குழந்தையை தந்தை அவ்வப்போது பார்க்க கோர்ட்டில் அனுமதி பெறலாம். 18 வயதிற்கு பின் அந்த குழந்தை தான் யாரிடம் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம். கணவன்-மனைவி இடையே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்க வேண்டும். சற்று பொறுமையாக யோசித்து முடிவெடுக்கலாம். கணவன்-மனைவி இருவரும் நல்ல நிலையில் இருந்தாலும் அவர்களிடையே புரிதல் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம். விவாகரத்தை தவிர்ப்பது தம்பதிகளுக்கு நல்லது.

சகிப்பு தன்மை இல்லை

புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி:- திருமணமானவர்களிடையே சகிப்பு தன்மை, விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாமல் போய்விட்டது. பெண்கள் பலர் படித்துவிட்டோம், தங்களால் எதையும் சாதிக்க முடியும் என எண்ணுகின்றனர். ஆனால் குடும்ப வாழ்க்கையில் தோற்றுவிடுகின்றனர். தங்களது பிடிவாத குணத்தால் யாருடைய தயவு இல்லாமல் வாழ முடியும் என எண்ணி தவறான முடிவை எடுக்கின்றனர். இதனால் விவாகரத்தும் அதிகரிக்கிறது. பெண்கள் புகுந்தவீட்டில் செல்லும் போது சற்று அனுசரித்து செல்ல வேண்டும். பெண்கள் தங்களுடைய அம்மா, அப்பா மற்றும் உறவுகளை மதிப்பதை போல் புகுந்த வீட்டில் கணவரின் பெற்றோரையும், உறவுகளையும் மதிக்க வேண்டும். ஆனால் அப்படி பலர் நினைப்பதில்லை. கணவரின் வருமானத்தை மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என எண்ணுகின்றனர். மனிதநேயம் கெட்டதால் தான் விவாகரத்து அதிகரிக்கிறது. படிப்பு, வேலை, அதிகார போதை என்ற காரணத்தில் பெண்கள் சிலர் தங்களது இல்லற வாழ்க்கையில் சாதிப்பதில்லை. கூட்டுக்குடும்ப வாழ்க்கை இல்லாதது தான் இன்றைய காலக்கட்டத்தில் விவாகரத்து வழக்குகள் அதிகரிக்கவும் ஒரு காரணம். திருமணமானதும் சிலர் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று எண்ணுகின்றனர். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் சமுதாயத்தில் நல்லது, கெட்டதுகளை உணர்ந்து சரியானதை சொல்லிக்கொடுத்து கடைப்பிடிக்க நடைமுறைப்படுத்துவார்கள். புகுந்த வீட்டில் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற காரணத்தினாலும் விவாகரத்தை பெண்கள் சிலர் நாடுகின்றனர்.

கருத்து வேறுபாடு

புதுக்கோட்டையை சேர்ந்த மனநல மருத்துவர் தெய்வநாயகம்:- சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பொறுப்பு என சில வகுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய சமூகத்தில் பாலின பொறுப்புகள் மாறிவிட்டன. ஆண்களுக்கான பொறுப்பை பெண்களும் செய்ய தொடங்கி விட்டனர். கணவர்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் பொருளாதார சுதந்திரம், வெளி உலக வாழ்க்கை, தெளிவான திட்டம் உள்ளது. இதில் பல ஏமாற்றங்கள் வரும் போது முறிவுகளை நோக்கி செல்கிறது. கணவர்-மனைவி இடையே பிரச்சினை வரும் போது இருவரும் பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும். இருவருக்கும் குடும்ப பொறுப்பு உள்ளது. குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் இருவரும் அனுசரித்து செல்ல வேண்டும். இருவரும் குடும்ப பொறுப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும். கணவர்-மனைவி இருவரும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு ஒப்பந்தம் போன்றது. இதில் கருத்து வேறுபாடு வந்தால் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இருவருக்கும் இடையே மனஸ்தாபம் இருந்தால் தவிர்க்க முடியாத காரணங்களால் மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். மேலும் தமிழ்நாடு நட்புடன் மனநல சேவை உதவி தொலைபேசி எண்14416 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பேசி இருவரும் தீர்வு காணலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விவாகரத்து கோருவதற்கான காரணங்கள்

1. உடலாலும் மனதாலும் கொடுமைப்படுத்துதல்.

2. திருமண உறவைத் தாண்டிய தவறான உறவுமுறை.

3. தகுந்த காரணமின்றி பிரிந்து செல்லுதல். அதாவது, கணவனோ அல்லது மனைவியோ பிரிந்துசென்று, இரண்டு ஆண்டுகள் வரை ஒன்றாக இணையவில்லையெனில், இந்தக் காரணத்தைக் கொண்டு விவாகரத்து கோரலாம்.

4. திருமணம் செய்துகொள்ளும்போது, கணவனோ மனைவியோ தான் பின்பற்றிவந்த மதத்தைவிடுத்து, வேறு ஒரு மதத்தைப் பின்பற்றினால், மற்றொருவர் விவாகரத்து கோரலாம்.

5. இருவரில் ஒருவருக்கு மனநலப் பாதிப்பு, மனநலம் சம்பந்தப்பட்ட நோய் ஆகியவை இருப்பின், விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதைப் போதிய காரணமாக சட்டம் ஏற்றுக்கொள்ளும்.

6. தொழுநோய். (இதை ரத்துசெய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மேலவையில் நிலுவையில் உள்ளது.)

7. இருவரில் ஒருவருக்கு எய்ட்ஸ் போன்ற குணப்படுத்த முடியாத பாலியல் தொற்றுநோய் இருப்பின், விவாகரத்து பெற முடியும்.

8. உலக வாழ்வைத் துறந்து துறவு மேற்கொள்ளுதல்.

9. கணவனோ அல்லது மனைவியோ எங்கு இருக்கிறார் அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பதுகூட ஏழு ஆண்டுகள் வரை கேள்விப்படாமல் இருக்கும்பட்சத்தில், அவர் இறந்திருக்கக்கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் விவாகரத்து செய்வது.

10. தற்காலிக நீதிமன்றப் பிரிவை அல்லது சேர்ந்து வாழ்தலுக்கான மனுவின் மீதான தீர்ப்புக்குப் பிறகு, ஓர் ஆண்டுக்குமேல் ஒன்று சேராமல் இருத்தல் என்பது விவாகரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்படும் காரணம் ஆகும்.

11. இந்தியச் சட்டத்தின்படி, ஏதாவது கிரிமினல் குற்றத்துக்காக ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றால், அதன்பொருட்டு விவாகரத்து பெறலாம்.

12. ஆண்மையற்று இருந்தாலோ, திருமண உறவில் உடலுறவில் ஈடுபடாமல் இருந்தாலோ, அதற்காக விவாகரத்து கோரலாம்.

13. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி, விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) போன்ற குற்றம் செய்தால், அதன் காரணமாக விவாகரத்து செய்ய மனைவிக்கு உரிமை வழங்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்