பட்டாசு ஆலைகள் விபத்து தொடர்வது ஏன்? அரசு கண்காணிப்பை தீவிரமாக்க வேண்டும் - முத்தரசன்

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் உயர் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

Update: 2024-02-17 23:28 GMT

கோப்புப்படம் 

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், குண்டாயிருப்பு கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு நான்கு பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே கருகி மடிந்தனர் என்ற செய்தி பெரும் வேதனை அளிக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் பெரிய, சிறிய பட்டாசு தயாரிப்பு தொழிலகங்களில் விபத்து தடுப்புக்கான ஏற்பாடுகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

தொழிலகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தொடர்புடைய அலுவலர்கள் நேரில் சோதனை செய்து, சரி பார்க்கும் நடவடிக்கையில் எந்தவித சமரசத்துக்கும் இடமளிக்கக் கூடாது. ஆனால், நடைமுறையில் இது பெருமளவு பெயரளவிலேயே நடப்பதால் விபத்துக்கள் தொடர்கின்றன என்ற தகவலை தமிழ்நாடு அரசு கருத்தில் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் விபத்து ஏற்படாமல் தடுப்பதை மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. இந்த விபத்தில் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் உயர் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை அரசு உறுதிப்படுத்த வேண்டும். விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்