சிறப்பாக பணியாற்றிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை மாற்றியது ஏன்? - அண்ணாமலை கேள்வி

ஆடியோ காரணமாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் துறை மாற்றப்பட்டது தவறு என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.;

Update: 2023-05-12 10:40 GMT

சென்னை,

சென்னையில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஆவடி நாசர் நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே நாங்கள் பல குற்றச்சாட்டுக்கள் வைத்திருந்தோம். அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியதற்கு பாராட்டுகிறோம். புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் பால் கொள்முதல் விலையை உயர்த்தியும், ஆவின் பால் விலையை குறைத்தும் வழங்க வேண்டும். அதற்கு சிறப்பான நிர்வாக அனுபவம் தேவை.

தொழில்துறை பொறுப்பை டி.ஆர்.பி. ராஜாவுக்கு வழங்கி உள்ளனர். அது என்ன காரணம் என்று தெரியவில்லை. அந்த குடும்பம் தான் 20 தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது. அவர்களுக்கு இந்த துறையை வழங்கி உள்ளார்கள். என்ன ஐடியாவில் இதை வழங்கி இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. டி.ஆர்.பாலு என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பதாக அறிகிறேன். இதனால் நான் பயந்துவிடப் போவதில்லை. இன்னும் உங்கள் மீதான குற்றச்சாட்டு அதிகமாகுமே தவிர குறையாது.

நிதி அமைச்சராக பொறுப்பு வகித்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மிக சிறப்பாக செயல்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மேடைகளிலேயே பாராட்டி இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவரிடம் இருந்து நிதித்துறையை மாற்றுவதற்கு என்ன காரணம்? பி.டி.ஆர். ஆடியோ விவகாரத்துக்காக மாற்றப்பட்டிருந்தால் அதை ஏற்க முடியாது. அது அவரது தவறல்ல. இப்போதும் நான் சவால் விடுகிறேன்.

அந்த ஆடியோவில் முதல்-அமைச்சரையும் தான் குற்றம்சாட்டி உள்ளேன். இதற்கும் என் மீது வழக்கு போடுங்கள். விவகாரம் கோர்ட்டுக்கு வரட்டும். ஒருமணிநேரம் ஓடும் அந்த ஆடியோவை கோர்ட்டு ஆய்வு செய்யட்டும். அதில் இருக்கும் பல தகவல்கள் வெளிவரட்டும். தவறு செய்தவர்களை பற்றி தான் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசி இருக்கிறார். அவரை மட்டுமே பகடை காயாக மாற்றிவிடக்கூடாது என்பதால்தான் 3 மற்றும் 4-வது பகுதியை நான் இன்னும் வெளியிடவில்லை.

என் மீது இதுவரை தி.மு.க.வை சார்ந்தவர்களும், அவர்களது நண்பர்களும் ரூ.1,461 கோடி கேட்டு வழக்கு போட்டுள்ளார்கள். இந்தியாவில் இதுவரை யார் மீதும் இவ்வளவு பணம் கேட்டு வழக்கு போட்டதில்லை. அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. வழக்கை கோர்ட்டில் சந்திக்கிறேன். இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

தி.மு.க.வின் ஊழல் 2-வது பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும். ஏற்கனவே வெளியிட்ட பட்டியலில் 11 பேர் பெயர் இடம்பெற்று இருந்தது. இனி வெளியிடப்படும் பட்டியலில் புதிய அமைச்சர்கள் உள்பட 21 பேர் பெயர் இடம்பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்