இன்றைய இளைஞர்களிடம் விவாகரத்து முடிவு அதிகரித்து இருப்பது ஏன்?-சட்ட நிபுணர், பொதுமக்கள் கருத்து
இன்றைய இளைஞர்களிடம் விவாகரத்து முடிவு அதிகரித்து இருப்பது ஏன் என்பது குறித்து சட்ட நிபுணர், பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.;
இன்றைய அவசர உலகில் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் இளம் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலும், விட்டு கொடுத்து வாழத் தெரியாமலும், சிறிய விஷயங்களுக்கு எல்லாம் கோபப்பட்டு, சண்டை போட்டுக் கொண்டு விவாகரத்து வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் இந்த முடிவை எடுக்கின்றனர்.
சாதி, மதம், இனம் என்று வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரும் விவாகரத்தை தேடிச்செல்கின்றனர். சகிப்பு தன்மையும், புரிதலும் இல்லாததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. கணவன்-மனைவி இருவருக்கும் விவாகரத்து பெறுவதற்கான சம உரிமை இருந்தாலும், விவாகரத்து கோருவதற்கு சில காரணங்கள் சட்டரீதியாக இருக்கின்றன என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். அதுபற்றிய விவரத்தை காண்போம்.
புரிதல் இல்லாமை
பனமரத்துப்பட்டியை சேர்ந்த மனநல மருத்துவ நிபுணர் பிரதீப்:-
இன்றைய உலகில் கணவன், மனைவி இருவரும் தங்களின் பொருளாதார நிலைமையை சரியாக புரிந்து கொண்டு உண்மை நிலையை உணராமல் எதிர்பார்ப்புகளை அதிகரித்து கொண்டு வாழ்கின்றனர். இந்த எண்ணம் கொண்டிருப்பவர்கள் யதார்த்தத்தில் அப்படி இல்லை என்று தெரிய வரும்போது ஏமாற்றமடைகிறார்கள். மேலும் பெரும்பாலான கணவன், மனைவி இடையே ஒருவரையொருவர் அடிப்படை புரிதல் இல்லாமல் அடிக்கடி சந்தேகப்படுகின்றனர். இதுதவிர இருகுடும்பத்தை சேர்ந்த பெற்றோர்கள், உறவினர்கள் வழிகாட்டுதல் என்ற பெயரில் எப்போதும் அவர்களது கருத்து சுதந்திரத்தில் தலையிடுதல், பழக்கவழக்கத்தில் குறை கூறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுமட்டுமில்லாமல் நிலையான வேலை இல்லாதது, பாலியல் எதிர்பார்ப்புகள், குடி அல்லது போதை பதக்கம், புகை பிடித்தல் போன்ற தீய பழக்கங்கள், திருமணத்திற்கு பின் தகாத உறவு முறை போன்றவை கணவன்-மனைவி இடையே பிரிவை உண்டாக்குகிறது. மேலும் 90 சதவீதம் எப்போதும் பிறருடனும், பிற குடும்பத்தினருடனும் ஒப்பிட்டு பார்ப்பது பிரச்சினையை உண்டாக்குகிறது. இன்றைய காலகட்டத்தில் ஈகோ என்பது தம்பதியரிடம் விரிசல் முற்றுவதற்கு முக்கிய காரணமாகிறது. கணவன்-மனைவி இடையே சகிப்புத் தன்மை வெகுவாகக் குறைந்து போய்விட்டது. இதுபோன்ற காரணங்களால் தான் தற்போது விவாகரத்து அதிகரித்து வருகின்றன. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால் விவாகரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
கூட்டு குடும்பமாக....
மஜ்ரா கொல்லப்பட்டியை சேர்ந்த தங்கம்:-
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலானோர் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். அப்போது கணவன், மனைவி இடையே ஏதாவது மன கசப்பு ஏற்பட்டால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் உடனடியாக அழைத்து அவர்களுக்கு அறிவுரை கூறி அதற்கு தீர்வு காண்பார்கள். ஆனால் தற்போது அது கிடையாது. திருமணமாகி ஒரு ஆண்டுக்குள்ளே பலர் தனியாக சென்று தான் வாழ விரும்புகின்றனர். இதனால் அவர்களிடையே சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட அது பெரிதாகி விடுகிறது. மேலும் அவர்கள் உடனடியாக பிரிந்தும் சென்று விடுகின்றனர். இதையடுத்து அவர்களை அழைத்து பேசுவதற்குள் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு செல்கின்றனர். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழ்ந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்த செந்தில்குமார்:-
ஒருவனுக்கு ஒருத்தி என்ர தமிழர் பண்பாடு என்ற நிலை மாறி, தற்போது மேலைநாடுகளின் கலாசாரம் பரவி இளைஞர்களின் நலன் மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. செல்போன் மற்றும் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மூலம் தவறான பதிவுகளால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. கணவன், மனைவி இடையே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வெகுவாக குறைந்து விட்டது. பெண்கள் வேலைக்கு செல்லும் இடத்தில் ஏற்படும் ஈர்ப்பு, கணவரிடம் அன்பு செலுத்தாமை போன்ற காரணங்களாலும் விவாகரத்து அதிகரித்து வருகின்றன.
மேல்நாட்டு கலாசாரம்
ஓமலூர் செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த வக்கீல் கலா:-
இன்றைய தலைமுறைகளில் படித்த மற்றும் படிக்காத இளைஞர்கள் பலர் விவாகரத்து கோரி அனைத்து மாவட்டத்தில் உள்ள குடும்ப நல கோர்ட்டுகளில் வழக்கு தாக்கல் செய்து வருவதை பார்க்க முடிகிறது. இது இன்றைய சூழ்நிலையில் குடும்ப உறவில் உள்ள நம்பிக்கையை பாழாக்கி விடுகிறது. சிறு, சிறு பிரச்சினைகளுக்கு கூட விவாகரத்து கோருவது மிகவும் வருத்தம் அளிக்க கூடியதாக உள்ளது. இதனால் பிற்காலத்தில் வரும் பாதிப்புகளை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. நம் நாட்டு கலாசாரம் சிறிது, சிறிதாக அழிந்து, வளர்ந்து வரும் மேல்நாட்டு கலாசாரமும் இதற்கு ஒரு காரணமாகும்.
இன்றைய காலக்கட்டத்தில் கணவன், மனைவி இருவருமே சம்பாதிப்பதால் தாம் எதையும் யாருடைய துணையின்றி தனியாக வாழ முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால் தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர் தகுந்த புத்திமதிகளை கூறி வளர்க்க வேண்டும். மேலும் விவாகரத்து கோரும் இளைஞர்கள் உள்பட பலருக்கு அரசு சிறப்பு கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
விவாகரத்து கோருவதற்கான காரணங்கள் வருமாறு:-
1. உடலாலும் மனதாலும் கொடுமைப்படுத்துதல்.
2. திருமண உறவைத் தாண்டிய தவறான உறவுமுறை.
3. தகுந்த காரணமின்றி பிரிந்து செல்லுதல். அதாவது, கணவனோ அல்லது மனைவியோ பிரிந்துசென்று, இரண்டு ஆண்டுகள் வரை ஒன்றாக இணையவில்லையெனில், இந்தக் காரணத்தைக் கொண்டு விவாகரத்து கோரலாம்.
4. திருமணம் செய்துகொள்ளும்போது, கணவனோ மனைவியோ தான் பின்பற்றிவந்த மதத்தைவிடுத்து, வேறு ஒரு மதத்தைப் பின்பற்றினால், மற்றொருவர் விவாகரத்து கோரலாம்.
5. இருவரில் ஒருவருக்கு மனநலப் பாதிப்பு, மனநலம் சம்பந்தப்பட்ட நோய் ஆகியவை இருப்பின், விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதைப் போதிய காரணமாக சட்டம் ஏற்றுக்கொள்ளும்.
6. தொழுநோய். (இதை ரத்துசெய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மேலவையில் நிலுவையில் உள்ளது.)
7. இருவரில் ஒருவருக்கு எய்ட்ஸ் போன்ற குணப்படுத்த முடியாத பாலியல் தொற்றுநோய் இருப்பின், விவாகரத்து பெற முடியும்.
8. உலக வாழ்வைத் துறந்து துறவு மேற்கொள்ளுதல்.
9. கணவனோ அல்லது மனைவியோ எங்கு இருக்கிறார் அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பதுகூட ஏழு ஆண்டுகள் வரை கேள்விப்படாமல் இருக்கும்பட்சத்தில், அவர் இறந்திருக்கக்கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் விவாகரத்து செய்வது.
10. தற்காலிக நீதிமன்றப் பிரிவை அல்லது சேர்ந்து வாழ்தலுக்கான மனுவின் மீதான தீர்ப்புக்குப் பிறகு, ஓர் ஆண்டுக்குமேல் ஒன்று சேராமல் இருத்தல் என்பது விவாகரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்படும் காரணம் ஆகும்.
11. இந்தியச் சட்டத்தின்படி, ஏதாவது கிரிமினல் குற்றத்துக்காக ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றால், அதன்பொருட்டு விவாகரத்து பெறலாம்.
12. ஆண்மையற்று இருந்தாலோ, திருமண உறவில் உடலுறவில் ஈடுபடாமல் இருந்தாலோ, அதற்காக விவாகரத்து கோரலாம்.
13. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி, விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) போன்ற குற்றம் செய்தால், அதன் காரணமாக விவாகரத்து செய்ய மனைவிக்கு உரிமை வழங்கப்படுகிறது.