சாத்தான்குளம் வழக்கில் புதிய சாட்சியை சேர்த்தது ஏன்?
சாத்தான்குளம் வழக்கில் புதிய சாட்சி சேர்க்கப்பட்டது ஏன்? என்பது பற்றி சி.பி.ஐ. தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் விளக்கம் அளிக்கப்பட்டது.;
மதுரை
சாத்தான்குளம் வழக்கில் புதிய சாட்சி சேர்க்கப்பட்டது ஏன்? என்பது பற்றி சி.பி.ஐ. தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இரட்டை கொலை வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 போலீசாரை சி.பி.ஐ. கைது செய்து மதுரை சிறையில் அடைத்தது. இந்த இரட்டைக்கொலை வழக்கின் விசாரணை மதுரை கோர்ட்டில் நடந்து வருகிறது.
ஜாமீன் மனு
இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், "சாத்தான்குளம் வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன். தந்தை, மகன் இறப்புக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது உடல் நலக்குறைவு காரணமாக சிரமப்பட்டு வருகிறேன். எனவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும"் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், "கைது செய்யப்பட்டதில் இருந்து மனுதாரர் ஜாமீன் கிடைக்காமல் உள்ளார். ஏற்கனவே குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டும், பல முறை கால நீட்டிப்பு பெற்றுள்ளனர். தற்போது புதிதாக சாட்சியை சேர்த்து விசாரிக்கின்றனர். வேண்டுமென்றே காலதாமதம் செய்து கொண்டிருக்கின்றனர். எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என வாதிடப்பட்டது.
சி.சி.டி.வி. காட்சி
அப்போது சி.பி.ஐ. தரப்பில், இந்த வழக்கை விசாரிக்கும் கோர்ட்டில் சமீபத்தில்தான் நீதிபதி, நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இன்னும் 3 மாதத்திற்குள் இந்த வழக்கு விசாரணை முடிந்து விடும். சி.சி.டிவி. காட்சிகளுக்காக ஒரு சாட்சியை சேர்த்து உள்ளோம். ஐகோர்ட்டு உத்தரவுப்படி 3 மாதத்தில் வழக்கை முடித்து விடுவோம். எனவே ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என வாதிட்டனர்.
அதனை தொடர்ந்து, இந்த வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.