ஆன்லைனில் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளை கழுத்தை அறுத்து கொன்ற ஐ.டி. ஊழியர்..!

ஆன்லைனில் ரம்பம் வாங்கிய ஐ.டி. ஊழியர் தனது மனைவி, பிள்ளைகளை கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது;

Update: 2022-05-28 07:09 GMT

சென்னை,

சென்னை பல்லாவரம் அருகே மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கொலை செய்துவிட்டு , தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் வசித்து வந்தவர் ஐடி ஊழியர் பிரகாஷ்(41). இவருக்கு காயத்ரி(39) என்ற மனைவியும் , நித்யஸ்ரீ என்ற 13 வயதில் மகளும், ஹரிஹரன் என்ற 8 வயது மகனும் உள்ளனர்.

இந்நிலையில் ஐடி ஊழியர் பிரகாஷ் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை மரம் அறுக்கும் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதன் பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . இவர்கள் வீட்டுக்கு இன்று காலை சென்ற பிரகாஷின் தந்தை, வீட்டில் அனைவரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நான்கு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் கொலைக்கான காரணங்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்டமாக சம்பவ இடத்திலிருந்த கைரேகையை பதிவு செய்து, கைரேகை நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வீட்டினுள் சோதனைகள் செய்தனர். அப்போது இறப்பதற்கு முன் கடிதம் ஒன்றை அக்குடும்பத்தினர் எழுதி வைத்துள்ளது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அக்கடிதத்தில், தங்களின் இந்த முடிவு, குடும்பத்தோடு சேர்ந்து எடுத்த முடிவு என குறிப்பிட்டிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் பிரகாஷ் வீட்டில் சுமார் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான கடன் பத்திரம் கிடைத்திருப்பதாகவும், அதனால் கடன் தொல்லையால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொழிச்சலூர் கொலை சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தாம்பரம் காவல் ஆணையர் ரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "மனைவி, பிள்ளைகளை கொன்றுவிட்டு ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடன் தொல்லையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த ஐ.டி. ஊழியர் ஆன்லைனில் மரம் அறுக்கும் ரம்பத்தை வாங்கி கொலை செய்துள்ளார். அவரது பிள்ளைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்கொலை கடிதத்தை வீட்டின் சுவற்றில் ஒட்டிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்