எந்திரங்கள் மூலம் மணல் அள்ள அனுமதித்தது யார்? - கல்லணை அருகில் 15 கி.மீ. தூரம் குவாரிகள் செயல்பட இடைக்கால தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கல்லணை அருகில் 15 கி.மீ. தூரம் குவாரிகள் செயல்பட இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. எந்திரங்கள் மூலம் மணல் அள்ள அனுமதித்தது யார்? எனவும் கேள்வி எழுப்பியது.

Update: 2023-01-04 20:01 GMT


கல்லணை அருகில் 15 கி.மீ. தூரம் குவாரிகள் செயல்பட இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. எந்திரங்கள் மூலம் மணல் அள்ள அனுமதித்தது யார்? எனவும் கேள்வி எழுப்பியது.

கல்லணைக்கு பாதிப்பு

திருச்சி லால்குடியை சேர்ந்தவரும், கொள்ளிடம் ஆறு பாதுகாப்பு நலச்சங்கத்தின் தலைவருமான சண்முகம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திருச்சி, கல்லணை அதைச்சுற்றி உள்ள பூதலூர், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. இங்கு மணல் எடுப்பது தொடர்ந்தால் கல்லணை சேதமடையும். இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முழுவதுமாக பாதிக்கப்படுவதுடன், அப்பகுதி மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவர்.

கல்லணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அதன் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

நிரந்தர நடவடிக்கை

எனவே கல்லணையில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மணல் அள்ள இடைக்கால தடை விதிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த பகுதியில் குவாரிகள் செயல்படுவதற்கு நிரந்தரமாக தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, சமீபத்தில் கல்லணை அருகில் எந்திரங்களை பயன்படுத்தி மணல் அள்ளுவது தொடர்பான புகைப்படங்களை தாக்கல் செய்தார்.

இடைக்கால தடை

அதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, இந்த பகுதியில் அரசு குவாரிகள் முறையாக அனுமதி பெற்று கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து செயல்பட்டு வருகின்றன என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அனுமதி பெற்று இயங்கினாலும், விதிகளை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எந்திரங்களை பயன்படுத்தி மணல் அள்ள யார் அனுமதி வழங்கியது? என கேள்வி எழுப்பினர்.

குவாரியில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், உரிய விசாரணை அமைப்பின் மூலம் விசாரிக்க உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர்.முடிவில், இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் வருகிற 11-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை கல்லணையின் கிழக்கு, மேற்கு பகுதிகளில் 15 கிலோ மீட்டர் தூரம் வரை குவாரிகள் செயல்பட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்