தண்டவாளத்தை கடந்த போது ரெயில்வே கேட்டை உடைத்த சரக்கு வாகனம் கடலூரில் பரபரப்பு

கடலூரில் தண்டவாளத்தை கடந்த போது, ரெயில்வே கேட்டை சரக்கு வாகனம் மோதி உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-11-27 19:50 GMT

கடலூர் திருப்பாதிரிப்புலியூர்- கம்மியம்பேட்டையை இணைக்கும் வகையில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டை கடந்து தான் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் திருப்பாதிரிப்புலியூர் நோக்கியும், மறுமார்க்கத்தில் கம்மியம்பேட்டை, செம்மண்டலம், சாவடி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர். குறிப்பாக அங்குள்ள பள்ளிகளுக்கும் மாணவர்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மதியம் 2.40 மணி அளவில் புதுச்சத்திரத்தில் இருந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் வழியாக சென்னைக்கு சரக்கு ரெயில் செல்வதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக கம்மியம்பேட்டை ரெயில்வே கேட்டை கொஞ்சம், கொஞ்சமாக கேட் கீப்பர் பாரதி மூடினார். அப்போது கம்மியம்பேட்டையில் இருந்து திருப்பாதிரிப்புலியூர் நோக்கி சரக்கு வாகனத்தை கூத்தப்பாக்கம் டிரைவர் சுப்பிரமணி என்பவர் ஓட்டி தண்டவாளத்தை கடந்தார்.

சரக்கு வாகனம் மோதி உடைந்தது

அதற்குள் ரெயில்வே கேட் மூடியதும், அதை உடைத்தபடி சரக்கு வாகனம் சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கேட் கீப்பர், சரக்கு வாகன டிரைவரை சத்தம் போட்டார். சத்தம் கேட்ட டிரைவர் வாகனத்தை நிறுத்தினார். ஆனாலும் ரெயில்வே கேட் உடைந்து, சரக்கு வாகனத்தின் மேல் தொங்கியபடி நின்றது. அதை கேட் கீப்பர் மேலே தூக்க முயற்சி செய்தும் பலனில்லை.

இதற்கிடையில் இதை கண்டுகொள்ளாத மற்ற வாகன ஓட்டிகள் தண்டவாளத்தை கடந்து சென்றனர். அவர்களை கேட் கீப்பர் விசில் அடித்தபடி எச்சரித்தார். இருப்பினும் அவர்கள் தண்டவாளத்தை கடந்து சென்றபடி இருந்தனர். இதையடுத்து அவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் திருப்பாதிரிப்புலியூர் வந்த சரக்கு ரெயில், சிக்னல் கிடைக்காமல் அங்கேயே நிறுத்தப்பட்டது.

3 ரெயில்கள் தாமதம்

அதன்பிறகு ரெயில்வே என்ஜினீயரிங் பிரிவு ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அவர்கள், உடைந்த ரெயில்வே கேட்டை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் உடனடியாக அதை சரி செய்ய முடியவில்லை. நீண்ட நேரம் ஆகும் என தெரிந்த ஊழியர்கள், சரக்கு ரெயிலை இயக்க அறிவுறுத்தினர். அதன்பேரில் உடைந்த ரெயில்வே கேட் பகுதியில் ரெயில்வே ஊழியர்கள் நின்று, தண்டவாளத்தை வாகன ஓட்டிகள் கடந்து செல்லாதபடி பார்த்துக்கொண்டனர்.

பின்னர் சைகை மூலம் சிக்னல் கொடுத்ததால், சரக்கு ரெயில் அங்கிருந்து 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. அதேபோல் சிக்னல் கிடைக்காமல் மும்பை- காரைக்கால் ரெயில் மாலை 3.15 மணிக்கு வந்து 3.25 மணி வரையிலும், விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரெயில் மாலை 3.40 மணி முதல் 3.50 மணி வரை நெல்லிக்குப்பம் ரெயில் நிலையத்தில் நின்று தாமதமாக திருப்பாதிரிப்புலியூர் வந்து சென்றது.

கைது

தொடர்ந்து உடைந்த ரெயில்வே கேட்டை ஊழியர்கள் வெல்டிங் வைத்து முழுமையாக சரி செய்தனர். இந்த பணி மாலை 6 மணி வரை நடந்தது. இந்த சம்பவம் பற்றி கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வாகன டிரைவர் சுப்பிரமணியை கைது செய்தனர். சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கம்மியம்பேட்டை ரெயில்வே கேட் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்