இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Update: 2024-06-25 00:01 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறைந்து கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 9 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லார், நீலகிரி மாவட்டம் செருமுள்ளியில் தலா 7 செ.மீ., நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 6 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி, கோவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருசில இடங்களிலும் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோல, வரும் 28-ந்தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும்.

இதேபோல, தெற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்