நீ எந்த சமூகத்தை சேர்ந்தவன்? மாணவரிடம் கல்லூரி பேராசிரியை பேசும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு
நீ எந்த சமூகத்தை சேர்ந்தவன்? மாணவரிடம் கல்லூரி பேராசிரியை பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.;
சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை, அவரிடம் படிக்கும் ஒரு மாணவர் ஒருவரிடம் செல்போனில் பேசும் உரையாடல் நேற்று சமுக வலைதளங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த உரையாடலின் போது, கல்லூரியில் சில மாணவர்களை பற்றி கேட்பதும், அவர்கள் என்ன சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கேட்பதும், அதற்கு அந்த மாணவர் பதில் அளிப்பதுமாகவும் உரையாடல் நீடிக்கிறது.
மேலும் உரையாடலில் பேசும் மாணவரிடமும், 'நீ எந்த சமூகத்தை சேர்ந்தவன் என்பது கூட எனக்கு தெரியாது என்று பேராசிரியை கூறிவிட்டு, ''கண்ணா நீ எந்த சமூகத்தை சேர்ந்தவன்டா''? என்று கேட்டு இருக்கிறார். இதுதவிர 'ஒவ்வொருவரின் மூஞ்சிலயும் அவன் எந்த பிரிவை சேர்ந்தவன்?' என்று எழுதி வைத்திருக்கிறது என்றும், 'நீ அந்த சமூகத்தை சேர்ந்தவர்களிடம் ஜாக்கிரதையாக இரு' என்றும் மாணவரிடம், பேராசிரியை அந்த உரையாடலில் பேசுவதுபோல் வெளியாகியுள்ளது.
கல்வி கற்றுத்தர வேண்டிய இடத்தில் கல்லூரி பேராசிரியையின் இந்த உரையாடல் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக பச்சையப்பன் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, 'சம்பந்தப்பட்ட பேராசிரியையிடம் கல்லூரி ஒழுங்கு நடவடிக்கை குழு வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தும் என்றும், அதனைத்தொடர்ந்து அவர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.