தமிழக பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை எப்போது கிடைக்கும்?- மக்கள் நீதி மய்யம் கேள்வி

"மகளிர் உரிமைத்தொகை" திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.;

Update: 2022-07-25 08:48 GMT

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

மக்கள் நீதி மய்யம் முதலில் முன்வைத்த "மகளிர் உரிமைத் தொகையானது" தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றது. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆட்சிக்கு வந்தபின்னர், "அனைவருக்கும் வழங்க முடியாது. உரிமைத்தொகை பெறத்தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து வழங்குவோம்" என்றார் நிதி அமைச்சர்.

கடந்த பட்ஜெட்டின் போது, நிதிநிலைமை சரியானதும் வழங்கப்படும் என்று புதுநிலைப்பாடு எடுத்தார் நிதி அமைச்சர். தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து விவாதிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிதி அமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள சூழலில் "மகளிர் உரிமைத்தொகை" திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்