அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும்? - கல்வித்துறை தகவல்

நடப்பு கல்வியாண்டு நிறைவுபெற உள்ள நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கான(2023-2024) மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகள் ஏற்கனவே தொடங்கி சேர்த்து வருகின்றனர்.

Update: 2023-04-15 15:14 GMT

சென்னை,

நடப்பு கல்வியாண்டு நிறைவுபெற உள்ள நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கான(2023-2024) மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகள் ஏற்கனவே தொடங்கி சேர்த்து வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை இருந்து வருவதால், அதற்கேற்றாற்போல், அரசு பள்ளிகளும் மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை கல்வியாளர்கள் மத்தியில் இருந்து வந்தது.

அதன்படி, அடுத்த கல்வியாண்டுகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக கல்வித்துறை வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,

'அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. 1 முதல் 9-ம் வகுப்பு வரையில் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர் அருகில் உள்ள அரசு பள்ளிகளை அணுகலாம். இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகள் ஓரிரு நாட்களில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்' என்றனர்.

இதற்கிடையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற பெயரில், வருகிற 17-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும் என்றும், அந்த பேரணியில் அரசு பள்ளியில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள், மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவிட்டு இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்