குளிர்சாதன பெட்டியை திறந்தபோது கதவு மோதி சிறுவன் சாவு
கும்பகோணத்தில், குளிர்சாதன பெட்டியை திறந்தபோது கதவு மோதியதில் சிறுவன் உயிரிழந்தான். இதுெதாடர்பாக அவனது உறவினர் கைது செய்யப்பட்டார்.;
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் கொத்தன் ஒத்தை தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் வினோத்குமார் (வயது 26). திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். வினோத்குமாரும், ராஜ்குமாரும் உறவினர்கள்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமார், தனது மகன் ஜெகதீஸ்வரன் (2) மற்றும் குடும்பத்தினருடன் கும்பகோணம் வந்து வினோத்குமார் வீட்டில் தங்கியிருந்தார்.
குளிர்சாதன பெட்டியின் கதவு மோதியது
இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி வினோத்குமார் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியின்(பிரிட்ஜ்) கதவை திறந்துள்ளார். அப்போது அருகே நின்று கொண்டிருந்த சிறுவன் ஜெகதீஸ்வரன் மீது குளிர்சாதன பெட்டியின் கதவு பலமாக மோதியதாக கூறப்படுகிறது.இதில் படுகாயமடைந்த ஜெகதீஸ்வரன் மயங்கி விழுந்தான். பின்னர் அவனை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தான்.
உறவினர் கைது
இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், வினோத்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.