தனியார் வாகனங்களில் அரசு சின்னங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
தனியார் வாகனங்களில் விதிகளுக்கு புறம்பாக அரசு சின்னங்கள், ஸ்டிக்கர்கள், எழுத்துகள் பயன்படுத்துவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்பவர் கிருத்திகா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
'ஜி' வரிசை பதிவு
கார்களில் முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை அகற்ற வேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டும், அந்த உத்தரவு முழுமையாக இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இன்னும் பல கார்களின் முன்பகுதியில் பம்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநகர பஸ்களுக்கு என்று பிரத்யேகமாக வாகன பதிவு எண் 'என்' வரிசையில் வழங்கப்படுகிறது.
அதேபோல, அரசு வாகனம் என்பதை அடையாளம் காட்ட 'ஜி' வரிசையில் பதிவு எண்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், தனி நபர்கள், தங்களது வாகனங்களில் 'ஜி' என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர்.
அகற்ற வேண்டும்
அதுமட்டுமல்ல, மத்திய, மாநில அரசுகளின் வாகனங்கள் என்ற எழுத்து வடிவத்திலும் எழுதிக்கொள்கின்றனர். இதை தடுக்க சட்டங்கள் இருந்தும், அந்த சட்டங்கள் முறையாக அமல்படுத்துவது இல்லை. அரசியல்வாதிகளை கண்டு போலீசார் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், இதுபோன்ற சட்டங்களை எல்லாம் அப்பாவிகளிடம்தான் போலீஸ் தீவிரமாக அமல்படுத்துகின்றனர்.
எனவே, சாலைகளில் வாகன சோதனை நடத்தி, அதிகாரிகள் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதற்கு ஒத்துழைக்காத அரசியல்வாதிகள் குறித்து வீடியோ ஊடகங்கள் மூலம் மக்களுக்கு அடையாளம் காட்டவேண்டும்.
தனியார் வாகனங்களில் 'ஜி', அரசு முத்திரை, மத்திய அரசு, தமிழ்நாடு அரசு, ஐகோர்ட்டு, போலீஸ் என்று எழுதப்பட்டிருப்பதை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
என்ன நடவடிக்கை?
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், தனியார் வாகனங்களில் விதிகளுக்கு புறம்பாக அரசு சின்னங்கள், ஸ்டிக்கர்கள், எழுத்துகள் பயன்படுத்துவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.