விஜய்யின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் தி.மு.க. அரசுக்கு என்ன பிரச்சினை? - பிரேமலதா கேள்வி
யார் வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.;
மதுரை,
மதுரையில் தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் இல்ல திருமண விழாவில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
அமெரிக்காவில் முதல்-அமைச்சர் சைக்கிள் ஓட்டுகிறார், பாடுகிறார், சிலைகளின் முன்பு போட்டோ எடுக்கிறார். முடிவில் எவ்வளவு முதலீடுகளை ஈர்க்கிறார் என்று பார்ப்போம். ஏற்கனவே பல நாடுகளுக்கு சென்று எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தனர், இளைஞர்களுக்கு எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்பது தெரியவில்லை.
விஜய்யின் 'தி கோட்' படத்திற்கு எனது வாழ்த்துக்கள். விஜய்யின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் தி.மு.க. அரசுக்கு என்ன பிரச்சினை? கார் பந்தயம் நடத்துவதற்கு ஒரே இரவில் கோர்ட்டு அனுமதி பெற அரசால் முடிகிறது. ஜனநாயக நாட்டில் கட்சி நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்? யார் வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது. விஜய் மாநாடு நடத்தி, கொள்கைகள், செயல்பாடுகளை அறிவித்த பின்னர்தான் அவருடனான கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியும்.
ஒரே இரவில் பல கோடி செலவு செய்து கார் பந்தயம் நடத்துவதால் யாருக்கு என்ன பலன்? அந்த பணத்தை வைத்து தமிழ்நாடு முழுவதும் நல்ல தரமான சாலைகளை அமைத்திருக்கலாம். ஆவினில் பாலில் தண்ணீர் கலப்பது ஊரறிந்த உண்மை. பல ஊழல்கள் நடக்கிறது. இதையெல்லாம் தடுக்க அரசு தவறிவிட்டது. முதல்-அமைச்சர் அமெரிக்கா செல்வதற்கு முன்னர் தமிழ்நாட்டில் நடக்கும் ஊழல்களை சரி செய்தாலே போதும். இவ்வாறு அவர் கூறினார்.