மீன்பிடித்த போது விசைப்படகு கவிழ்ந்தது: கடலில் மூழ்கிய 3 குமரி மீனவர்களின் கதி என்ன?; 13 பேர் பத்திரமாக மீட்பு

மீன்பிடித்த போது விசைப்படகு கவிழ்ந்ததில் கடலில் தத்தளித்த 13 குமரி மீனவர்கள் மீட்கப்பட்டனர். ஆனால் 3 பேர் கடலில் மூழ்கி விட்டனர். அவர்களின் கதி என்னவென்று தெரியாததால் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.;

Update: 2023-09-29 18:45 GMT

குளச்சல், 

மீன்பிடித்த போது விசைப்படகு கவிழ்ந்ததில் கடலில் தத்தளித்த 13 குமரி மீனவர்கள் மீட்கப்பட்டனர். ஆனால் 3 பேர் கடலில் மூழ்கி விட்டனர். அவர்களின் கதி என்னவென்று தெரியாததால் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.

மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்

குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத் தெருவை சேர்ந்தவர் பி.ஆரோக்கியம் (வயது 50). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார்.

இந்த படகில் பங்குதாரரான மாதா காலனியை சேர்ந்த ஆன்றோ (47) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி கே.ஆரோக்கியம் (52), கொட்டில்பாடை சேர்ந்த பயஸ் (54) உள்பட 16 தொழிலாளர்கள் கடந்த 25-ந் தேதி குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.

விசைப்படகு கவிழ்ந்தது

இந்த விசைப்படகை ஆன்றோ ஓட்டினார். நேற்று முன்தினம் நள்ளிரவு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் இருந்து சுமார் 30 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் இந்த விசைப்படகில் இருந்தபடி மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென விசைப்படகு ஒரு பக்கமாக சாய்ந்து கவிழ்ந்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடலில் மூழ்கிய அவர்கள் தங்களுடைய உயிரை காப்பாற்ற தத்தளித்தபடி இருந்தனர். இந்த நிலையில் அந்த வழியாக மற்றொரு குளச்சல் விசைப்படகு வந்தது. இதனை பார்த்ததும் கடலில் தத்தளித்த மீனவர்கள், இனி நாம் தப்பித்து விடலாம் என்ற நம்பிக்கை துளிர் விட்டது.

அதேபோல் அந்த விசைப்படகில் வந்த மீனவர்கள் சுதாரித்துக் கொண்டு உயிருக்கு போராடிய மீனவர்களை ஒவ்வொருவராக மீட்டு தங்களுடைய படகில் ஏற்றினர். அந்த வகையில் 13 பேர் வரை காப்பாற்றப்பட்டனர்.

3 பேரின் கதி என்ன?

ஆனால் ஆன்றோ, ஆரோக்கியம், பயஸ் ஆகிய 3 பேரையும் காணவில்லை. இதனால் சக மீனவர்கள் பதற்றத்திற்குள்ளானார்கள். கடலில் குதித்த 3 பேரும் நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சிய அவர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். எனினும் இறுதி வரை 3 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. பின்னர் சோகத்துடன் சக மீனவர்கள் கரை திரும்பினர். நேற்று இரவு வரை கடலில் மூழ்கிய 3 மீனவர்கள் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்காததால் அந்த மீனவர்களின் குடும்பத்தினரும், மீனவ மக்களும் சோகத்தில் உள்ளனர்.இதற்கிடையே மீனவர்களை தேடுவதற்காக விசைப்படகுகளில் அந்த பகுதிக்கு மற்ற மீனவர்கள் விரைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்