கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு மத்திய பா.ஜனதா அரசு செய்தது என்ன? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செய்தது என்ன? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார்.;

Update: 2023-06-10 21:47 GMT

தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

சேலத்தில் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நேற்று இரவு நடந்தது. அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட உள்ளோம். இதற்கு கட்சி உயர்மட்ட கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதையொட்டி ஒவ்வொரு ஊரிலும் கட்சி கொடி கம்பத்தை புதுப்பித்து கொடியேற்ற வேண்டும். கட்சி தொண்டர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவிட வேண்டும். கருணாநிதியின் சாதனைகளை பட்டி, தொட்டி எல்லாம் மக்களிடம் எடுத்துக்கூற கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் போன்றவை நடத்திட வேண்டும். அவரது மார்பளவு சிலையை திறந்து வைக்க வேண்டும் என உங்களிடம் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

நாடாளுமன்ற தேர்தல்

விரைவில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அச்சாரமாக இந்த கூட்டம் நடைபெறுகிறது. சேலத்திலும் நாம் பெருவாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற வேண்டும். அதனால்தான் அமைச்சர் நேருவை இங்கே அனுப்பி வைத்திருக்கிறேன். திருச்சியில் நடந்த உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தலில் 100-க்கு 100 மார்க் எடுத்தவர் அமைச்சர் கே.என்.நேரு. அதேபோல் நாடாளுமன்ற தேர்தலிலும் அமைச்சரின் ஆலோசனையை கேட்டு நீங்கள் உழைக்க வேண்டும்.

நாம் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிந்தநிலையில் கட்சி செயல்பாடுகளில் மந்தம் ஏற்பட்டு விடக்கூடாது என கருதிதான் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படுகிறது. புதிதாக 2 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். தமிழகம் முழுவதும் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நாம் பூத் கமிட்டி அமைக்கும் பணியையும் முடித்திருக்கிறோம். இது சாதாரண பணி அல்ல. இந்தியாவில் மட்டுமின்றி ஏன் உலகத்திலேயே இதுபோன்ற அரசியல் பணியாற்றும் கட்சி எதுவும் இல்லை. கட்சிக்காக தொண்டர்கள் தொடர்ந்து உழைக்கிறீர்கள். தொடர்ந்து உழைப்பீர்கள்.

உழைப்புக்கான அங்கீகாரம்

நீங்கள் எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம். உழைப்பு, உழைப்பு என்று செயல்படுங்கள். உங்கள் உழைப்பு வீண் போகாது. உழைப்புக்கான அங்கீகாரம் உங்களை வந்து சேரும். நான் இருக்கிறேன். ஒரு பக்கம் கட்சி, மற்றொரு பக்கம் ஆட்சி மூலம் மாநிலத்தின் வளர்ச்சியை பார்க்க வேண்டும். இந்த இரண்டையும் இரு கண்களாக கருதி செயல்பட வேண்டும். அடுத்த ஆண்டுதான் நாடாளுமன்ற தேர்தல் என்று சாதாரணமாக இருந்து விடக்கூடாது. தற்போது நாட்டில் பா.ஜனதாவின் செல்வாக்கு சரிந்து வருகிறது. அந்த ஆத்திரத்தில் அவர்கள் எந்த முடிவையும் எடுப்பார்கள். கர்நாடக மாநில தேர்தலில் ஏற்பட்ட தோல்வி பா.ஜனதாவுக்கு தொடரும் என்றால் நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வரலாம். இதற்கு நாம் இப்போதே தயாராக வேண்டும். சென்னைக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வந்துள்ளார். இதன்மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கு அவர்கள் தயாராகி வருவது தெரிகிறது. தொடர்ந்து வேலூர் பொதுக்கூட்டத்திலும் அவர் பேச உள்ளதாகவும் தெரிகிறது.

மத்திய அரசு என்ன செய்தது?

நான் கேட்கிறேன். தமிழ்நாட்டுக்கு கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு செய்தது என்ன? என்று அவரால் திட்டங்களை பட்டியலிட்டு கூறமுடியுமா?. மத்தியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது, தமிழ்நாட்டுக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதாவது, மெட்ரோ ரெயில் முதல்கட்ட பணி, சேது சமுத்திர திட்டம், ரூ.1,553 கோடியில் சேலம் உருக்காலை கொண்டு வந்தது, சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சென்னை மதுரவாயல் இடையே பறக்கும் சாலை திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றியது, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் என ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தோம்.

ஆனால் மத்தியில் ஆளுகிற பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தது? தமிழ்நாட்டில் பங்கேற்கும் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவால் சொல்ல முடியுமா? அவர்கள் கொண்டு வந்தது என்ன? இந்தி, சமஸ்கிருதம் திணிப்பு, தமிழ் புறக்கணிப்பு, நீட் தேர்வு திணிப்பு, மாநில உரிமை பறிப்பு, மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை கூட தரவில்லை. இதுதான் அவர்கள் தமிழ்நாட்டுக்கு செய்தது.

எய்ம்ஸ் மருத்துவமனை

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் கூறினார்கள். மத்திய மந்திரி அருண் ஜெட்லி கூறினார். அவர் அறிவித்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் பிற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு மனம் இல்லை. எனவே, தமிழகத்திற்கு வரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கடந்த 9 ஆண்டுகளில் என்ன திட்டங்கள் செய்தார்கள்? என்று சொல்ல முடியுமா? இதை தமிழ்நாட்டு மக்களில் ஒருவனாகவும், முதல்-அமைச்சராகவும் இருந்து கேட்கிறேன். இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்.

அ.தி.மு.க.-பா.ஜனதா உறவு

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு இடத்தில்தான் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அதன்பிறகு அவர்களது ஆட்சியில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல், அடுத்து நடந்த சட்டமன்ற தேர்தல், நகராட்சி தேர்தல் என அனைத்து தேர்தலிலும் தோல்வி மேல் தோல்வி அடைந்த கட்சி அ.தி.மு.க ஆகும். ஆனால் சமீபத்தில் அ.தி. மு.க.வை சேர்ந்த ஒருவருக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகி வருகிறது. அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் கைகோர்த்து கொண்டிருக்கிறது. இதை நினைக்கும்போது, ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது, கரையில் நின்றவர்கள் வெள்ளத்தில் வரும் பொருட்கள் நமக்கு ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் ஒருவருக்கு கருப்பா பெரிதாக ஒரு பொருள் வந்தது. அதை எடுக்க முயன்றபோது, அது பொருள் இல்லை, அது கரடி என்று தெரிந்தது. அதன்பிறகு அந்த கரடி அவரை விடவில்லை. அதேபோன்று தான் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி இருக்கிறது. மக்கள் வெள்ளத்தில் இந்த இரு கட்சிகளும் காணாமல் போகும்.

காலை வாரி விட்டார்

சசிகலாவின் காலில் விழுந்து பதவி வாங்கிய எடப்பாடி பழனிசாமி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபின்பு அவரது காலையே வாரிவிட்டார். அதன்பிறகு பா.ஜனதாவுக்கு அவர் பல்லக்கு தூக்கி 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துவிட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடித்து தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்தனர். கடந்த 2 ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான எண்ணற்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மகளிருக்கு இலவச பஸ், மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், மகளிருக்கு உரிமைத்தொகை ரூ.1,000 என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். எனவே, 2 ஆண்டுகள் தி.மு.க. அரசின் சாதனைகளை கட்சி தொண்டர்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்