மூத்த குடிமக்களின் தேவை என்ன? எதிர்பார்ப்பு என்ன?
மூத்த குடிமக்களின் தேவை என்ன? எதிர்பார்ப்பு என்ன? என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.;
அனைவருக்கும் தேவைப்படும் அத்தியாவசியமான பொருளாக இன்று மருந்துகள் மாறிவிட்டன. ஒவ்வொரு குடும்பத்திலும் உணவுப்பொருட்களுக்காக ஒதுக்கும் பட்ஜெட்டில் மருந்தும் மறக்காமல் இடம்பிடித்து கொள்கிறது. இந்தநிலையில், அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலைகள் கடந்த 1-ந்தேதி முதல் 12 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இதனால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாவோர்கள் மூத்த குடிமக்கள் தான். காரணம் நிறையப் பேர் வருமானம் இல்லாமலும், போதுமான சேமிப்புகள் இல்லாமலும், ஓய்வூதியம் பெற்று வாழ்க்கையை ஓட்டி வருபவர்களாகத்தான் இருக்கின்றனர். வயதானாலே கூடவே இணை நோய்களும் வந்து விடுகின்றன.
அதுமட்டுமா? கொரோனா பரவிய காலத்தில் முதியவர்களுக்கு குறிப்பாக ஆண் பயணிகளுக்கு 40 சதவீதமும், பெண் பயணிகளுக்கு 50 சதவீதமும் வழங்கப்பட்டு வந்த ரெயில் கட்டண சலுகையும் பறிக்கப்பட்டுவிட்டது. அதேபோல் கடன் பத்திரங்கள் மூலம் முதியவர்கள் செய்யும் சேமிப்புகளுக்கு 10 சதவீத வருமானவரி விலக்குச் சலுகையும் கடந்த 1-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டு விட்டது. வங்கிகளில் இன்சூரன்ஸ் திட்டங்கள் ரத்து, வருங்கால வைப்பு நிதி மூலம் அளிக்கப்படும் ஓய்வூதியம் குறைப்பு இப்படி ஒவ்வொன்றும் தங்களுக்கு பாதகமாக நடப்பதாகவே அவர்கள் கருதுகிறார்கள்.
இதுபற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் கருத்துகள் வருமாறு:-
முதியோர்களுக்கு ஆறுதல்
அண்ணாநகரைச் சேர்ந்த 82 வயதான மூத்த முதியோர் நல மருத்துவர் டாக்டர் வி.எஸ்.நடராஜன்:-
வயது ஆக, ஆக நோய்களும் அதிகரித்து வருகின்றன. முன்பெல்லாம் நோய்கள் வந்தால் 10 நாட்களுக்கு மருந்து சாப்பிட்டால் போதும், ஆனால் தற்போது வரும் நோய்களுக்கு ஆண்டு கணக்கிலோ அல்லது வாழ்நாள் முழுவதுமே மருந்து சாப்பிட வேண்டிய நிலை உள்ளதால் மருத்துவ செலவும் அதிகரிக்கிறது. எனவே முதியவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அரசு அளிக்கும் ஓய்வூதியத்தை வைத்துதான் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். முதியோர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஓய்வூதியத்தையும், வங்கிகளில் வட்டி விகிதத்தையும் அதிகரிக்க வேண்டும். நகர்ப்புறங்களில் மட்டும் ஆங்காங்கே காணப்படும் மத்திய அரசின் மக்கள் மருந்தகங்களை கிராமப்புறங்களிலும் அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும். முதியோர் நலன் பிரிவை அனைத்து மாவட்ட தலைநகர் மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகளிலும் தொடங்க வேண்டும். நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளை ரேஷன் கடைகளிலேயே முதியவர்களுக்கு இலவசமாக வழங்கலாம். 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் அரசே காப்பீடு செய்து கொள்ள வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் முதியவர்களுக்கு நிமோனியா ஊசியை இலவசமாக போட வேண்டும். இதுவே முதியோர்களின் தேவையும், எதிர்பார்ப்புமாக இருப்பதுடன், முதியவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கும்.
ரஷியாவை பின்பற்றுமா?
கான்பூர் ஐ.ஐ.டி. விண்வெளி பொறியியல் துறை பேராசிரியர் (ஓய்வு) மற்றும் ஜப்பான் டோக்கியோ பல்கலைக்கழக சிறப்பு பேராசிரியருமான இ.ராதாகிருஷ்ணன்:- மூத்த குடிமக்கள் விவகாரத்தில் ரஷியாவை போன்று நம்முடைய அரசு பின்பற்ற வேண்டும். அங்கு மூத்த குடிமக்களின் சேமிப்புக்கு 12 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்றவர்களிடம் வருமான வரி செலுத்த நிர்பந்திக்ககூடாது. மாறாக வளர்ந்த நாடுகளில் இருப்பது போன்று மூத்த குடிமக்களுக்கு வருமான வரி சலுகைகள் வழங்க வேண்டும். அதேபோல், முதியவர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே சேர்த்துக்கொள்ள வேண்டும். முதியவர்களுக்கு அங்கு பஸ் கட்டணத்தில் சலுகையாக பாதித்தொகை செலுத்தினால் போதும். அதில் முதியோரின் மனைவி அல்லது துணைக்கு ஒருவரையும் அழைத்து செல்லலாம். இதேபோன்று இங்கும் போக்குவரத்து துறையில் முதியவர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும்.
விலை உயர்வு
தாயில்பட்டியை சேர்ந்த பேச்சியம்மாள்:-
அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதேபோல கியாஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. ஆதலால் கஷ்டப்பட்டு நாங்கள் குடும்பத்தை நடத்தி வருகிறோம். இந்தநிலையில் மருந்துகளின் விலை உயர்வை நாங்கள் எப்படி சமாளிக்க போகிறோம் என தெரியவில்லை.
அத்துடன் ரெயில் கட்டண சலுகையும் பறிக்கப்பட்டுவிட்டது. ஆதலால் முதியவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய, மாநில அரசுகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் மருந்தகம்
சிவகாசி சுரேஷ்:- சிவகாசி பகுதியில் சிவகாசி, சித்துராஜபுரம், ரிசர்வ்லைன், திருத்தங்கல் ஆகிய 4 இடங்களில் மக்கள் மருந்தகம் உள்ளது. மத்திய அரசின் கீழ் இந்த மருந்தகங்கள் இயங்கி வருகிறது. இங்கு மருந்து, மாத்திரைகள் வாங்கி செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
அதிலும் குறிப்பாக தினமும் 50 முதல் 60 பேர் மருந்தகத்துக்கு வந்து தேவையான மருந்து, மாத்திரைகள் வாங்கி செல்கிறார்கள். குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மருந்து, மாத்திரை முதல் பெரியவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் என மொத்தம் 7 ஆயிரத்துக்கும் அதிகமான வகைகளில் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்கள் மருந்தகத்துக்கும் மற்ற கடைகளுக்கும் விலை வித்தியாசம் இருக்கும். மக்கள் மருந்தகத்தில் குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகள் வாங்கலாம் என்ற விழிப்புணர்வு தற்போது பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது. கடந்த காலத்தை விட தற்போது 5 சதவீதம் வரை மருந்து, மாத்திரைகளின் விலை உயர்ந்துள்ளது.
அரசு மருத்துவமனை
ஸ்ரீவில்லிபுத்தூர் முத்துமாரி:-
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மருந்து, மாத்திரைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு மேலும் கூடுதல் நிதி சுமையை அளிக்கிறது. அரசு மருத்துவமனைகளில் அனைத்து மாத்திரைகளும் கிடைப்பது இல்லை. ஆதலால் நாங்கள் தனியார் மெடிக்கலை தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
முதியவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் ஒவ்வொன்றாக குறைக்கப்பட்டு வருகிறது. முதியவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தால் நன்றாக இருக்கும்.
மருத்துவ காப்பீட்டு அட்டை
விருதுநகரை சேர்ந்த செல்வராஜ்:-
வயது முதிர்ந்த காலத்தில் அரசு வழங்கும் மருத்துவ காப்பீட்டு அட்டையில் மனைவியின் பெயரை சேர்த்து வழங்க வேண்டியது அவசியம். ஆனால் தற்போது வழங்கப்படும் மருத்துவ காப்பீட்டு அட்டையில் மனைவி பெயர் சேர்க்கப்படுவதில்லை. எங்களது புகைப்படமும் ஒட்டப்படுவதில்லை. இந்நிலையில் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றால் அவர்கள் 40 சதவீதம் மட்டுமே அட்டையின் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று சொல்லி மீதி பணத்தை செலுத்த சொல்லி அதிர்ச்சி தருகிறார்கள். இது எங்களுக்கு பெரும் சிரமத்தை தருகிறது. எனவே மருத்துவ காப்பீட்டு அட்டையின் மூலம் முழு பயனையும் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு ஏற்கனவே ெரயில் பயணங்களில் எங்களுக்கு வழங்கி வந்த சலுகைகளை ரத்து செய்து விட்டது. தற்போது அனைத்து ெரயில்களும் இயக்கப்படும் நிலையில் எங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதுமை காலத்தில் தான் மருந்துகளின் தேவை அதிகரிக்கிறது. அவ்வாறு இருக்கையில் விருதுநகரில் பிரதமரின் மக்கள் மருந்தகம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. மாநில அரசின் அம்மா மருந்தகங்களில் தேவைப்படும் மருந்துகள் கிடைப்பதில்லை. இதனால் மருந்துக்கென்றே தனி பட்ஜெட் ஒதுக்க வேண்டி உள்ளது. எனவே மக்கள் மருந்தகங்களை அனைத்து பகுதிகளிலும் இயக்க வேண்டும். தமிழக அரசு பெண்களுக்கு இலவச பஸ் பயணத்திற்கு வசதி செய்து கொடுத்துள்ளது போல முதியவர்களுக்கும் இந்த சலுகை வழங்க வேண்டும். வயது முதிர்ந்த காலத்தில் தான் வருமானம் தேவை என்ற அடிப்படையில் தான் தபால்அலுவலகங்களிலும், வங்கிகளிலும் பணத்தை முதலீடு செய்து வைக்கிறோம், ஆனால் அதற்கு கூடுதல் வட்டி வழங்கப்பட வேண்டிய நிலையில் தற்போது வட்டி சதவீதத்தை குறைக்கும் நிலைைய தவிர்க்க வேண்டும். மொத்தத்தில் முதியோர் மீது குடும்பத்தினரும் அரசும் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பறிக்கப்பட்ட சலுகை
தொம்பகுளம் சுப்புலட்சுமி:-
மத்திய அரசு ஏழைகளின் நலன் கருதி மக்கள் மருந்தகத்தை தொடங்கியது. இந்த மருந்தகம் விருதுநகர் மாவட்டத்தில் கூடுதல் இடங்களில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியவர்கள் நிறைய பேர் இன்று மருந்து, மாத்திரை இல்லாமல் வாழ முடியாது என்ற நிலையில் உள்ளனர். இந்தநிலையில் மருந்து, மாத்திரை விலை ஏற்றம் என்பது எங்களை போன்றவர்களுக்கு கூடுதல் சுமை ஆகும். மருந்து, மாத்திரை விலையை கட்டுப்படுத்துவதுடன், பறிக்கப்பட்ட சலுகைகளையும் மீண்டும் வழங்க வேண்டும்.
வத்திராயிருப்பை சேர்ந்த தம்பதி குருசாமி-முத்துமாரி:-
விலைவாசி உயர்வு காரணமாக மருந்து பொருட்களின் விலை சராசரியாக உயர்ந்துள்ளது. உயிர் காக்கும் மருந்துகளை இலவசமாக வழங்க நடவடிக்ைக எடுக்க வேண்டும். மருந்து மாத்திரைகளின் விலை உயர்வால் வாழ்வாதாரம் முற்றிலும் நிலை குலைந்து போகும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் பொருளாதார நிதி நிலையை கருத்தில் கொண்டு மருந்துகளின் விலை உயர்வு பரிசீலனை செய்து குறைந்த விலையில் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.