மேற்கு ஆஸ்திரேலிய சபாநாயகர், எம்.எல்.ஏ.க்கள் கோத்தகிரி வருகை
மேற்கு ஆஸ்திரேலிய சபாநாயகர், எம்.எல்.ஏ.க்கள் கோத்தகிரி வருகை தந்தனர். அவர்கள் ஜான் சல்லிவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;
கோத்தகிரி,
மேற்கு ஆஸ்திரேலிய சபாநாயகர், எம்.எல்.ஏ.க்கள் கோத்தகிரி வருகை தந்தனர். அவர்கள் ஜான் சல்லிவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வரவேற்பு
மேற்கு ஆஸ்திரேலியா நாட்டின் சட்டமன்ற பெண் சபாநாயகர் மிட்ச்செல்லி ராபட்ஸ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் டேவிட் ஹனி, டேவிட் ஸ்கைப் மற்றும் இந்திய வம்சாவளியான நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த மேற்கு ஆஸ்திரேலியா எம்.எல்.ஏ. ஜெகதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் கோத்தகிரி கன்னேரிமுக்கு கிராமத்திற்கு நேற்று வருகை தந்தனர்.
அவர்களுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டரும், ஊட்டி நகர் மற்றும் ஏரியை நிர்மாணித்தவருமான ஜான் சல்லிவன் நினைவகத்தை சபாநாயகர், எம்.எல்.ஏ.க்கள் நேரில் பார்வையிட்டனர். அப்போது நீலகிரியின் பழமையான புகைப்படங்களை பார்வையிட்டு, இடங்களை கேட்டறிந்தனர். அங்கு வளாகத்தில் உள்ள ஜான் சல்லிவன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நடனம் ஆடினர்
பின்னர் கிராம மக்களுடன் கலந்துரையாடினர். இதையடுத்து மேற்கு ஆஸ்திரேலியா சபாநாயகர், எம்.எல்.ஏ.க்கள் படுகர் இன மக்களுடன் நடனமாடினர். இன்று (புதன்கிழமை) கட்டபெட்டு பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலையை பார்வையிடுகின்றனர். தொடர்ந்து ஒன்னதலை கிராமத்தில் நடைபெறும் கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். கோத்தகிரி கன்னேரிமுக்கு கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ் கிருஷ்ணன் ஆஸ்திரேலியாவில் உள்ள எவர்டன் தொகுதியில் எம்.எல்.ஏ. வாக இருப்பது குறிப்பிடத்தக்கது.