போலி சான்றிதழ் மூலம் சேர்ந்த மேற்குவங்க மாநில பெண்
அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் போலி சான்றிதழ் மூலம் சேர்ந்த மேற்குவங்க மாநில பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வானவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்குப்பின் அவர்கள் விமான நிலையம், துறைமுகம், அணு உலைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்.
இந்தநிலையில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தினேஷ் சிங் என்பவரது மகள் சோனம் சிங் (வயது 23) என்பவர் பயிற்சி பெற்று வருகிறார். அவரது சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு அனுப்பி சரிபார்த்தபோது சான்றிதழ் போலியானது என்பது தெரிய வந்தது. இது குறித்து மத்திய தொழிற் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவபத்மா தக்கோலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.